Published : 16 Nov 2025 01:52 PM
Last Updated : 16 Nov 2025 01:52 PM
எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் (நவ.17) முடிவடைகிறது.
நம்நாட்டில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான சிமேட் தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக்.17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (நவ.17) நிறைவு பெறுகிறது. விருப்பமுள்ள பட்டதாரிகள் https://cmat.nta.nic.in/ எனும் வலைதளம் வழியாக விரைந்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம் செலுத்த நாளை மறுதினம் (நவ.18) கடைசி நாளாகும். 20, 21-ம் தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தேர்வுக்கான பாடத்திட்டம் உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் இருந்து அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT