Published : 15 Nov 2025 12:55 PM
Last Updated : 15 Nov 2025 12:55 PM

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் வென்ற பார்வை மாற்றுத்திறன் பி.ஹெச்டி மாணவர் முனியாண்டி!

சி.முனியாண்டி

கரூர்: கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் பார்வை மாற்றுத் திறன் மாணவர், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள கூட்டக்காரன்பட்டி என்கிற சித்திரப்பள்ளியைச் சேர்ந்தவர் சி.முனியாண்டி (30).

கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் இவர், அண்மையில் வெளியான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 155 பேரில் ஒருவர். கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2012-15-ம் ஆண்டுகளில் பி.ஏ. தமிழ் படித்த இவர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பி.எட். கல்லூரியில் 2015- 17-ம் ஆண்டில் பி.எட்., படித்தார்.

அப்போது, சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை குறித்து அறிந்து அங்கு தங்கி யுபிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாரானார். 2019-ல் முதல் முறையாக யுபிஎஸ்சி தேர்வெழுதினார். அப்போது வெற்றி பெறவில்லை. 2020-ம் ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பிய முனியாண்டி, 2020-ல் கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். ஆராய்ச்சி படிப்புடன் அரசின் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார்.

இதுகுறித்து சி.முனியாண்டி கூறியது: முதல்முறையாக 2019-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு எழுதினேன். அப்போதும், அதன்பிறகு 2 முறை எழுதியும் வெற்றி கிடைக்கவில்லை. 4-வது முறையாக நிகழாண்டு மே மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றேன். இதையடுத்து, சென்னையில் உள்ள தமிழக அரசின் அனைந்திந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் இணைந்து முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி பெற்றேன். தற்போது முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகியுள்ளேன் என்றார்.

இதுகுறித்து கரூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சா.சுதா கூறியது: கல்லூரியில பி.ஏ., தமிழ் படித்தபோது முனியாண்டி எப்போதும் நூலகத்திலேயே இருப்பார். சிறந்த நூலக பயன்பாட்டாளர் என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது. கல்லூரி நிர்வாக அனுமதியுடன் கல்லூரி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை அவர் நடத்தினார். அவரிடம் பயின்ற 16 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்று பணியில் உள்ளனர் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x