Published : 15 Nov 2025 07:06 AM
Last Updated : 15 Nov 2025 07:06 AM
தூத்துக்குடி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையை சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய 30 குழந்தைகள் அமைச்சர் பி.கீதாஜீவனுடன் விமானத்தில் பயணித்தனர். ரெயின் டிராப்ஸ் அறக்கட்டளை ‘வானமே எல்லை' எனும் திட்டத்தின் கீழ் அனந்தம் நிறுவனம், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் வேல்ஸ் வித்யாலயா கல்விக் குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த விமானப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சென்னையில் இருந்து 30 குழந்தைகள் தங்கள் முதல் விமானப் பயணத்தை நேற்று காலை தொடங்கினர். தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அக்குழந்தைகளுடன் பயணித்து, அவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.
இசையமைப்பாளரும், ரெயின் டிராப்ஸ் நல்லெண்ண தூதருமான ஏ.ஆர்.ரெஹானா, ரெயின் டிராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால், விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.பி.சாந்தோசம், மாநில திட்ட ஆணைய உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில், அனந்தம் நிறுவனர் பகீரதி ராமமூர்த்தி, ஆர்கானிக் உணவு நிபுணர் மண் வாசனை மேனகா உள்ளிட்டோரும் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் வேல்ஸ் வித்யாலயா கல்விக் குழுமத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் குழந்தைகளை உற்சாகமாக வரவேற்றனர்.

ஆட்சியருடன் கலந்துரையாடல்.. தொடர்ந்து, அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயாவுக்கு சென்ற குழந்தைகள், அங்கு நடைபெற்ற சிறப்பு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். இன்று இக்குழந்தைகள் தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கலந்துரையாடுகின்றனர். தொடர்ந்து, அமர்சேவா சங்கம், குற்றாலம் அருவி மற்றும் திரில் பார்க் ஆகிய இடங்களை பார்வையிடுகின்றனர். பின்னர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை திரும்ப உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT