Published : 13 Nov 2025 02:17 AM
Last Updated : 13 Nov 2025 02:17 AM
சென்னை: ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் 2,736 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 155 பேர் தமிழக மாணவர்கள் ஆவர்.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஐஎஸ் உள்பட 23 விதமான மத்திய அரசின் உயர் பதவிகளுக்கான அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் வகையில் சிவில் சர்வீசஸ் தேர்வு என்ற அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்துகிறது. இது, முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, ஆளுமைத் திறன் தேர்வு என 3 நிலைகளை உள்ளடக்கியது.
அந்த வகையில் சிவில் சர்வீஸ் பணிகளில் 979 காலியிடங்களை நிரப்புவதற்காக யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு கடந்த மே 25-ம் தேதி நடந்தது. இத்தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 11-ம் தேதி வெளியிடப்பட்டன. முதல்நிலைத் தேர்வில் 14,161 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த ஆக. 22 முதல் 31 வரை சென்னை உள்பட நாடு முழுவதும் 24 முக்கிய நகரங்களில் நடந்தது.
இந்நிலையில், மெயின் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்தகட்ட தேர்வான ஆளுமைத் திறன் தேர்வுக்கு 2,736 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 155 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 87 பேர் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுமைத் திறன் தேர்வு நடைபெறும் நாள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வு நடந்து முடிந்த பிறகு, மெயின் தேர்வு மதிப்பெண், ஆளுமைத் திறன் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன்பேரில் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் குருப்-ஏ, குருப்-பி பணிகளுக்கு தேர்வர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT