Published : 11 Nov 2025 06:05 AM
Last Updated : 11 Nov 2025 06:05 AM
சென்னை: கல்லூரி செமஸ்டர் தேர்வில் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டக்கூடிய வினாக்களை தயாரிப்பது தொடர்பாக சென்னை ஐஐடி உதவியுடன் கல்லூரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவுசெய்துள்ளது.
தற்போது கல்லூரி செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்களின் நினைவாற்றலைச் சோதிக்கும் வகையில்தான் வினாக்கள் கேட்கப்படுகின்றன. சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன், சிந்தனையைத் தூண்டும் திறன், ஆராயும் திறன் போன்ற திறன்களை மதிப்பீடும் வகையிலான வினாக்கள் கேட்கப்படுவதில்லை என்ற கருத்து பரலாக நிலவுகிறது.
இந்நிலையில், மாணவர்களின் சிந்தனையைத் தூண்டக்கூடிய வினாக்களை தயாரிக்க சென்னை ஐஐடி உதவியுடன் கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக உயர்கல்வி கவுன்சில் துணைத்தலைவர் எம்.பி.விஜயகுமார் கூறியதாவது: பொதுவாகவே நமது மாணவர்களுக்கு சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன், ஆராயும் திறன் குறைவாக உள்ளது. காரணம் மாணவர்களின் நினைவாற்றலைச் சோதிக்கும் வகையில்தான் தேர்வுகளில் வினாக்கள் கேட்கப்படுகின்றன. அந்த வகையில் தேர்வு நோக்குடன்தான் அவர்களும் பாடங்களை படிக்கின்றனர்.
இந்நிலையை மாற்றி மாணவர்களின் சிந்தனையைத் தூண்டக்கூடிய வகையிலான கேள்விகளைத் தயாரிப்பது தொடர்பாக சென்னை ஐஐடி உதவியுடன் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் மாணவர்கள் வெறுமனே பாடங்களை மனப்பாடம் செய்யாமல் கருத்துகளை தெளிவாகப் புரிந்து விடையளிக்கக் கூடிய சூழல் ஏற்படும்.
முதல்கட்டமாக தேசிய அளவிலான நிபுணர்களைக் கொண்டு கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக பயிற்சி பெற்ற இந்த ஆசிரியர்கள் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி அளவில் மற்ற ஆசிரியர்களுக்கு வினாத்தாள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT