Published : 05 Nov 2025 09:11 PM
Last Updated : 05 Nov 2025 09:11 PM
சென்னை: இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் அடங்கிய புதிய பாடத்திட்ட வடிவமைப்புக்கான உயர்மட்ட மற்றும் வல்லுநர் குழுக்களை பள்ளிக் கல்வித் துறை நியமனம் செய்துள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை - 2020-க்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கையை தமிழக அரசு வடிவமைத்து கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிட்டது. அதில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து, பாடத் திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகளில் மாற்றம் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அதன்படி புதிய பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்கான வல்லுநர் குழு மற்றும் அதை மேற்பார்வையிட்டு ஒப்புதல் அளிப்பதற்கான உயர்மட்டக் குழுவை பள்ளிக் கல்வித் துறை தற்போது நியமனம் செய்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: மாநிலக் கல்விக் கொள்கை-2025 அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றியமைப்பட உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க பாட நிபுணர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட வடிவமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் இருப்பார். மேலும், விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன், பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீ.தீலிப், தொல்லியல் நிபுணர் க.ராஜன் உட்பட 13 வல்லுநர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.
இந்த குழுவின் உறுப்பினர் செயலராக எஸ்சிஇஆர்டி இயக்குநரும், அலுவல் சாரா உறுப்பினர்களாக பள்ளிக்கல்வித் துறை செயலர் மற்றும் இயக்குநர், தொடக்கக் கல்வி, தேர்வுத் துறை மற்றும் தனியார் பள்ளிகள் துறைகளின் இயக்குநர்களும் இருப்பார்கள்.
வடிவமைப்பு குழுவானது தற்போதைய பாடத்திட்டம், கலைத்திட்டம், மதிப்பீட்டு முறைகள் மற்றும் கற்பித்தல் அணுகுமுறைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை ஆய்வுசெய்து, ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பின் கருத்துகளைப் பெற்று பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்கான பரிந்துரைகள் மற்றும் புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தயாரித்து வழங்கும்.
அவற்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையிலான 16 பேர் கொண்ட உயர்மட்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து இறுதி செய்யும். இந்தக் குழுவின் தலைவராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், துணைத் தலைவராக செயலரும், உறுப்பினர் செயலராக எஸ்சிஇஆர்டி இயக்குநரும் இருப்பார்கள். இதுதவிர இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், கணிதவியல் நிபுணர் ராமானுஜம், கல்வியாளர் மாடசாமி, இசைக் கலைஞர் சவுமியா உள்ளிட்ட 14 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்விரு குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாகும்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டு (2026-27) முதல் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கும், மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த வருடங்களில் அமல்படுத்தவும் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT