Last Updated : 02 Nov, 2025 08:18 PM

2  

Published : 02 Nov 2025 08:18 PM
Last Updated : 02 Nov 2025 08:18 PM

15 நாட்களில் பதவி உயர்வு வழங்காவிட்டால் போராட்டம் தொடரும்: காமராசர் பல்கலை. ஆசிரியர்கள் எச்சரிக்கை

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை 15 நாட்களில் வழங்காவிட்டால் போராட்டம் தொடரும் என,பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.

மதுரை காமராசர் பல்கலையில் பல்வேறு துறைகள் உள்ளன. இவற்றில் முதலில் உதவிப் பேராசிரியராக பணியில் சேருவோர் 1 முதல் 4 ஆண்டு, 4 - 5 ஆண்டு, 5 முதல் 12 மற்றும் 15 ஆண்டுகளில் பேராசிரியர் என, தகுதியின் அடிப்படையில் படிப்படியாக பதவி உயர்வு பெறுவர். தற்போது இப்பல்கலைக்கழகத்தில் உதவி, இணை, பேராசிரியர்கள் என 138 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 99 பேர் பதவி உயர்வுக்கான தகுதி பட்டியலை 2022-ல் துணைவேந்தர், ஆளுநர் பிரதிநிதி உள்ளிட்ட 9 பேர் குழுவினர் வழங்கிய நிலையில் இன்னும் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை.

இதன் காரணமாக ஒவ்வொருவரும் சுமார் ரூ. 40 ஆயிரம் சம்பள இழப்புடன் தகுதி குறைந்த பணியிடத்தில் பணிபுரிகின்றனர். பதவி உயர்வு கேட்டு உயர் கல்வித்துறை அமைச்சர், செயலர், கல்லூரி கல்வி ஆணையர் மற்றும் பல்கலை பதிவாளரிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இன்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட 99 ஆண், பெண் ஆசிரியர்களும் பல்கலை வளாகத்தில் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

அவர்களிடம் பதிவாளர் பேச்சுவார்த்தை நடத்தினர். உறுதியான முடிவின்றி போராட்டத்தை தொடர்ந்தனர். இதன்பின் தமிழக கல்லூரி கல்வி ஆணையரும், பல்கலை கன்வீனர் குழு தலைவருமான சுந்தரவல்லியிடம் 15 நாளில் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து கடிதம் கொடுத்தால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புகிறோம் என, காமராசர் பல்கலை பேராசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியது; “ஓரியண்டேஷன், புத்தாக்கப்பயிற்சி, பேப்பர் பப்ளிகேஷன், பிஎச்டி வழிகாட்டுதல் போன்ற யுஜிசி விதியின் அடிப்படையில் 99 பேருக்கும் பதவி உயர்வு தேர்வு பட்டியல் தயாரித்தனர். ஆனால் 2022 முதல் தொடர்ந்து முயற்சித்தும் பதவி உயர்வு வழங்கவில்லை. 2017 மற்றும் 2020-ல் தயாரித்த பதவி உயர்வுக்கான பட்டியலில் 10க்கும் மேற்பட்டோருக்கு குளறுபடி இருப்பதால் எங்களுக்கான பதவி உயர்வை தொடர்ந்து தாமதிக்கின்றனர்.

யுஜிசி விதியின்படி, எங்களது தேர்வு பட்டியல் முறையாக இருக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. பல்கலை கன்வீனர் குழு தலைவரான சுந்தரவல்லி படிப்படியாக பதவி உயர்வு மூலம் ஆணையராக உயர்ந்தவர். அவருக்குகூட எங்களது கஷ்டம் ஏன் புரியவில்லை. பதிவு உயர்வுக்கான சம்பள நிலுவையை கூட தாமதமாக பெறலாம், முதலில் பதவி உயர்வு அளிக்க வேண்டும். 15 நாளில் பதவி உயர்வு அறிவிக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x