Published : 02 Nov 2025 12:21 AM
Last Updated : 02 Nov 2025 12:21 AM

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்து ‘ஏஐ’ பாடம் அறிமுகம்: மத்திய கல்வித் துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாடு முழுவதும் பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாடம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் கணக்கீட்டு சிந்தனை (கம்ப்யூட்டேஷனல் திங்கிங்-சிடி) தொடர்பான பாடத்தை
அறிமுகப்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டம் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்றது. இதில் சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி, கேவிஎஸ், என்விஎஸ் பிரதிநிதிகள், நிபுணர்கள் பங்கேற்றனர்.

மேலும், ஏஐ மற்றும் சிடி பாடங்களை பள்ளிகளில் அறிமுகம் செய்வது தொடர்பாக ஆராய,சென்னை ஐஐடி பேராசிரியர் கார்த்திக் ராமன் தலைமையி
லான நிபுணர்கள் குழுவை சிபிஎஸ்இ அமைத்தது. இதுகுறித்து மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர் சஞ்சய் குமார் நேற்று கூறும்போது, ‘‘நம்மை சுற்றி உள்ள இந்த உலகத்தில் செயற்கை நுண்ணறிவு கல்வியை அடிப்படை திறனாக கருதவேண்டும். இதை முன்னிட்டு ஏஐ தொடர்பான பாடத்தை பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இது தேசிய கல்வி திட்டத்துடன் தொடர்புள்ளதாக மாற்றப்படும். எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த இது வழிவகுக்கும்’’என்றார்.

இதன்படி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்தே ஏஐ மற்றும் சிடி பாடங்கள் சேர்க்கப்படும். இதன்மூலம் தீவிர சிந்தனை, படைப்பாக்கம், செயற்கை நுண்ணறிவை சரியான நெறிமுறைகளுடன் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஆகியவற்றை இளம் வயதிலேயே கற்க முடியும். இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி, மற்றும் வீடியோக்கள் உட்பட பாடத் திட்டங்கள் உதவிகரமாக இருக்கும். ஏஐ கல்வித் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்த என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ இணைந்து செயல்படும். 3-ம் வகுப்பில் இருந்தே ஏஐ பாடத்திட்டம் கொண்டு வரப்படுவதால், 21-ம் நூற்றாண்டில் சிக்கல்களுக்கு தீர்வு, ஆராய்ச்சி, கணக்கீட்டு திறன்போன்றவற்றில் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் இத்திட்டம் 2026-27 கல்வி ஆண்டில் அறிமுகமாகும் என்று என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x