Published : 31 Oct 2025 05:22 PM
Last Updated : 31 Oct 2025 05:22 PM
சென்னை: தேர்வுத் துறையின் அலட்சியத்தால் மறுபிரதி உள்ளிட்ட சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் தேர்வுத் துறை இயக்குநரகம் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புக்கான ஆண்டுத் தேர்வுகளை நடத்திவருகிறது. அதனுடன் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்களையும் இயக்குநரகமே அச்சிட்டு விநியோகம் செய்கிறது. மேலும், அசல் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு மறுபிரதி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், புலப்பெயர்ச்சிக்கான சான்றிழ்தல் ஆகியவற்றை பெற தேர்வுத் துறைக்கு நேரில் வந்து விண்ணப்பித்து பெறும் நடைமுறை கடந்த ஆண்டுகளில் இருந்தது.
இந்த நடைமுறையில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் மறுபிரதி சான்றிதழ் வழங்கப்படாமல் தாமதிக்கும் நிலை இருந்தது. இதற்கு தீர்வு காணும் விதமாக இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் நடைமுறையை 2023-ல் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் தொடக்கத்தில் ஆன்லைன் நடைமுறையில் மறுபிரதி கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு 2 மாதங்களில் சான்றிதழ்கள் கிடைத்தன.
ஆனால், தற்போது மீண்டும் தேர்வுத்துறையின் செயல்பாடுகள் மந்தமாக நடைபெறுவதால் மறுபிரதி கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்படும் சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலர் கூறும்போது, ‘‘மறுபிரதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து 10 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனாலும், சான்றிதழ் கிடைத்தபாடில்லை. நேரில் வந்தாலும் அலுவலர்கள் உரிய பதில் அளிக்காமல் இழுத்தடிக்கின்றனர்.
அதேபோல், 3 நாட்களில் வழங்க வேண்டிய புலப்பெயர்ச்சி சான்றிதழ்களும் சில வாரங்கள் வரை இழுத்தடிக்கப்படுகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இயக்குநரகம் புலம்பி செல்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதனால், அரசு வேலை, உயர் கல்வி, மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடும் மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தேர்வுத் துறையின் இந்த மெத்தனப் போக்கை, பள்ளிக்கல்வித் துறை துரிதமாக சரிசெய்ய வேண்டும். மறுபிரதி உட்பட சான்றிதழ்களை கோரி விண்ணப்பித்த நபர்களின் விண்ணப்பங்களுக்கு உடனே தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT