Published : 30 Oct 2025 08:18 PM
Last Updated : 30 Oct 2025 08:18 PM
சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்படும் தகவல்களை துரிதமாக வழங்குவதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: ”பள்ளிக் கல்வித்துறையில் உள்ள முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
தற்போது இந்த அலுவலர்களுக்கு பயனர் குறியீடு (யூசர் நேம்), கடவுச்சொல் (பாஸ்வேர்டு) தனித்தனியாக உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பயனர் குறியீட்டை மாற்றம் செய்ய இயலாது. கடவுச்சொல்லை மாற்றி பின்னர் உள் நுழைந்து பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பொதுத் தகவல் அலுவலரும் தினமும் https://rtionline.tn.gov.in/RTIMIS/NODAL/index.php என்ற இணையதளத்தில் திறந்து பார்க்க வேண்டும்.
அதில் வந்துள்ள தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்கள், மேல்முறையீட்டு மனுக்கள் ஆகியவற்றை பதிவு செய்து உடனுக்குடன் உரிய தகவலை இணையதளம் வழியாக வழங்க வேண்டும். இதற்கு என ஒரு பதிவேடு பராமரிக்கப் பட வேண்டும். இது சார்ந்து மாதந்தோறும் 5ம் தேதி உயரதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த செயல்பாடுகளுக்காக தனி அலுவலர் மற்றும் தட்டச்சரை நியமித்து தினமும் கண்காணித்து உரிய காலக் கெடுவுக் குள் துரிதமாக தகவல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று சுற்றரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT