Published : 30 Oct 2025 06:22 AM
Last Updated : 30 Oct 2025 06:22 AM
சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணிகள் நாளை (அக்டோபர் 31) நடைபெறவுள்ளன. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.
மாநிலம் முழுவதுள்ள 7,717 தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாகப் படிக்கலாம்.
தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர். இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால், 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை நிறுத்தி வைத்திருந்தது. இதுகுறித்த வழக்கில் மத்திய அரசு தனது பங்கு நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றமும் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. தொடர்ந்து, ஆர்டிஇ திட்டத்தில் தனது பங்களிப்பு நிதியை மத்திய அரசு விடுவித்தது. அதன்பின் நடப்பாண்டில் ஆர்டிஇ மாணவர் சேர்க்கை பணிகள் தாமதமாக தொடங்கின. இதையடுத்து, பள்ளிகளில் ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவர்களில் தகுதியானவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டில் பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 7,717 பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர 81,927 குழந்தைகளும், ஒன்றாம் வகுப்பில் சேர 89 பேரும் விண்ணப்பித்தனர். அவற்றில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள் இன்றும், நாளையும் (அக். 30,31) நடத்தப்பட உள்ளது. அதன்படி ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைவிட விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் தகுதியுள்ள மாணவர்களின் சேர்க்கை இன்று நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பெற்றோர்கள் முன் வெளிப்படையான குலுக்கல் முறையில் நாளை மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் மேற்பார்வையிடுவார்கள். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT