Published : 26 Oct 2025 12:12 PM
Last Updated : 26 Oct 2025 12:12 PM
சென்னை: தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வரைவை திரும்பப் பெறுவதாக திமுக அரசு அறிவித்து உள்ளது. சமூகநீதிக்கு எதிரான சதித் திட்டங்கள் வெற்றி பெறாது என்பதை இந்த நடவடிக்கை நிரூபித்திருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த முன்வடிவை திரும்பப் பெறுவதாக திமுக அரசு அறிவித்திருக்கிறது.
சமூகநீதியை படுகொலை செய்யும் செயலுக்கு எதிராக பா.ம.க. எழுப்பியக் குரலைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் பின்வாங்கியிருப்பதன் மூலம் சமூகநீதிக்கு எதிரான திமுக அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது.
2019ஆம் ஆண்டின் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வரைவை கடந்த 15ஆம் தேதி சட்டப்பேரவையில் திமுக அரசு தாக்கல் செய்தது. தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகநீதியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த சட்ட முன்வரைவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 16ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
அந்த அறிக்கையில், தமிழக அரசின் சட்டத் திருத்தம் கல்வியை எந்த அளவுக்கு வணிகமயமாக்கும்? சமூகநீதியை எந்த அளவுக்கு அழிக்கும்? ஏழைகளிடமிருந்து உயர்கல்வி வாய்ப்புகளை எவ்வாறு தட்டிப் பறிக்கும்? என்பது குறித்தெல்லாம் அதில் விரிவாக விளக்கியிருந்தேன். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அக்டோபர் 17ஆம் தேதி விவாதமின்றி, குரல் வாக்கெடுப்பின் மூலம் அவசரமாக திமுக அரசு அதனை நிறைவேற்றியது.
திமுக அரசின் இந்த சமூக அநீதிக்கு எதிராக முதன்முதலில் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பிய குரல், தமிழகத்தின் கல்வியாளர்கள், பேராசிரியர் அமைப்புகள், சமூகநீதியாளர்கள் மற்றும் சில கட்சியினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தி, அரசுக்கு எதிரான கொந்தளிப்பாக மாறியது.
அது அடக்க முடியாத எதிர்ப்பு சுனாமியாக மாறிவிடும் என்பதை உணர்ந்த திமுக அரசு, இப்போது தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் 2025ஆம் ஆண்டின் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்ட முன்வரைவை திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளது. சமூகநீதிக்கு எதிரான சதித் திட்டங்கள் வெற்றி பெறாது என்பதை இந்த நடவடிக்கை நிரூபித்திருக்கிறது.
இப்போதும் கூட கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல நல்ல நோக்கத்திற்காகவே இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது போலவும், இந்த சட்டத் திருத்தத்தால் சமூகநீதியும், ஏழைகளின் கல்வியும் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதைப் போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த அரசு முயன்றுள்ளது. திமுக அரசு எந்த அளவுக்கு மக்களை ஏமாற்றும்? எந்த அளவுக்கு மோசடி செய்யும்? என்பதற்கு இதுவே சான்று.
தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் கீழ்க்கண்ட பாதிப்புகள் ஏற்படுமா, இல்லையா? என்பதை சமூக நீதியை படுகொலை செய்யும் திமுக அரசு விளக்க வேண்டும்.
1. மருத்துவம் தவிர்த்த பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.
2. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு அரசின் நிதியுதவி நிறுத்தப்படும்.
3. புதிதாக சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படும்.
4. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இப்போது வழங்கப்படும் ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் தொடர வேண்டும் என சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கும்.
5. தனியார் கல்லூரிகள் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களாக மாறி விடும்.
6. இவை அனைத்துக்கும் மேலாக, கடுமையான கட்டுப்பாடுகளுடன் புதிய தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு மட்டுமே கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டம் வகை செய்த நிலையில், ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்லூரிகளையும் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிப்பதற்கு அரசு துடித்தது ஏன்?
ஏராளமான தனியார் கல்லூரிகள் என்ன விலை கொடுத்தாவது தனியார் பல்கலைக்கழகமாக மாற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த நிலையில், அவற்றின் விருப்பத்தை நிறைவேற்றவே திமுக அரசு இந்த சட்டத் திருத்த முன்வரைவை கொண்டு வந்திருப்பதாக வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். எதிர்ப்பு மட்டும் எழாமல் இருந்திருந்தால், இந்த சட்டத்தை செயல்படுத்தி தனியார் கல்லூரிகள் அனைத்தையும் பல்கலைக்கழகங்களாக்கி கட்டணக் கொள்ளைகூடங்களாக திமுக அரசு மாற்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023 உள்பட சமூகநீதிக்கும், இயற்கைவளப் பாதுகாப்புக்கும் எதிராக ஏராளமான சட்டங்களையும், திட்டங்களையும் கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் திமுக கொண்டு வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
திமுக அரசு குற்ற உணர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் ஒரே ஒரு சட்டத்தை மட்டும் திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால், திமுகவின் துரோகங்களை மன்னிக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை. அவர்கள் அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களின் கடந்த கால தவறுகளை உணர்ந்து திமுக அரசையே திரும்பப் பெறுவார்கள். அதை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடும்’ எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT