Published : 26 Oct 2025 12:47 AM
Last Updated : 26 Oct 2025 12:47 AM
சென்னை: தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டு உரிய மறுஆய்வு செய்யப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) சட்ட மசோதா தொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) சட்டமசோதா குறித்து சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து சில விவரங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அதிகமான எண்ணிக்கையில் உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படுவதற்கான தேவை உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தற்போது இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள், மாநில தனியார் பல்கலைக்கழகங்களாக உயரும்போதும், புதிதாக தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கும் சில வழிமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கத்துக்காகவே இந்தச் சட்டமசோதா கொண்டு வரப்பட்டது.
அதேசமயம் மாணவர்கள் நலனோ, பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நலனோ எந்த வகையிலும் பாதிக்கப்படாத வண்ணம் உரிய சட்ட பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போதுள்ள தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் 2019, பிரிவு 4-ன்படி, தனியார் பல்கலைக்கழகம் நிறுவ குறைந்தபட்ச நில அளவு 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப்படுகிறது. ஆனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் அத்தகைய மிகப்பெரிய அளவிலான நிலத்தை அடையாளம் காண்பது மிகவும் கடினம்.
எனவே, வேகமாக நகரமயமாகி வரும் தமிழகத்தில் நிலங்களின் மதிப்பும் உயர்ந்து வருவதால் புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கும், பெரிய கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக தங்களை மாற்றிக்கொள்ளவும், தரம் உயர்த்திக்கொள்ளவும் முயற்சிக்கும்போது நில அளவின் தேவை சவாலாக உள்ளது. பிற அண்டை மாநிலங்களில் இருந்தும் கருத்துகள் பெறப்பட்டன. எனவே, உயர்கல்வியை மேலும் மேம்படுத்த நிலங்கள் தொடர்பான விதிமுறைகளை எளிமைப்படுத்த இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.
ஆசிரியர் நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டை பின்பற்றுவது, கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயிப்பது, பணியாளர் நலனை பாதுகாப்பது போன்ற அம்சங்களை உத்தரவாதப்படுத்தியும், கல்லூரிகள் அடுத்த உயர்நிலையை எட்டுவதற்காகவும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதேநேரத்தில், மாநில இடஒதுக்கீட்டு உரிமையை கருத்தில் கொள்ளாத நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு இதுவரை அரசு அனுமதி அளிக்கவில்லை.
இருப்பினும், இப்பொருள் குறித்து பேரவையில் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும், சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையிலும் இந்தச் சட்டமசோதா குறித்து கல்வியாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், கல்வித்துறை அலுவலர்கள் ஆகியோரின் கருத்துகளைப் பெற்று, அதன் அடிப்படையில் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்தச் சட்டமசோதா திரும்பப் பெறப்பட்டு உரிய மறு ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT