Published : 15 Oct 2025 05:42 PM
Last Updated : 15 Oct 2025 05:42 PM
டாக்டர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் தேசிய நினைவகம், அவரின் சொந்த ஊரான ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு பகுதியில் அவர் மறைவுக்குப் பிறகு நிறுவப்பட்டது. இதுதவிர கலாமின் பூர்விக வீடு, டெல்லியில் கலாம் நினைவகம், திருவனந்தபுரத்தில் கலாம் விண்வெளி அருங்காட்சியகம் ஆகியவற்றின் வழியாக இன்றளவும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
விண்வெளி அருங்காட்சியகம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம் உள்ளது. இங்கு கலாமின் அரிய ஒளிப்படங்கள், அவருடைய பெரும் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட ஜிஎஸ் எல்வி எம்கே- 3 ஏவுகணை, ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களின் சிறிய மாதிரி வடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக விவரிக்கும் ‘தி மிசைல் மேன்’ (‘The Missile Man’) குறும்படமும் இங்கு திரையிடப்படுகிறது. செய்தித்தாள்களை விநியோகித்த சிறுவன் நாட்டின் ஏவுகணை மனிதராக உயர்ந்தெழுந்த சரித்திரத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் தத்ரூபமாக கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் நினைவகங்களை வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்த்துவிடுங்கள்.
தேசிய நினைவகம்: மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) சார்பாகக் கடந்த 2017இல் ராமேசுவரத்தில் பேக்கரும்பு ஊரில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை மத்திய அரசு திறந்துவைத்தது. நான்கு அரங்குகளைக் கொண்ட இந்த நினைவுக்கட்டிடம் 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டிருக்கிறது.
கலாமின் மாணவப் பருவம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானியாக அவர் ஆற்றிய பங்களிப்புகள், டிஆர்டிஓவில் பணியாற்றியபோது முன்னெடுத்த திட்டங்கள், குடியரசுத் தலைவராகச் செயலாற்றிய விதம், உலகத் தலைவர்களுடன் கலாம் இடம்பெற்ற தருணங்களின் அரிய ஒளிப்படத் தொகுப்பு, ஓவியங்கள், உருவச் சிலைகள், கலாம் நிகழ்த்திய விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளின் மாதிரி வடிவங்கள் உள்ளிட்டவை இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
நுழைவுப் பகுதியில் கலாம் வீணை இசைத்தபடி அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலை, அவர் வாசித்த நூல்கள், அணிந்த ஆடைகள், பயன்படுத்திய பொருள்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. நினைவகத்தின் பின்பகுதியில் கலாமின் 7 அடி உயர வெண்கலச் சிலை, 45 அடி உயரத்தில் அக்னி-2 ஏவுகணையின் மாதிரி வடிவம் நிர்மாணிக்கப் பட்டிருக்கின்றன.
டெல்லி இல்லம்: குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து, பிறகு ஓய்வுபெற்று இறுதிவரையிலும் கலாம் வாழ்ந்த டெல்லி ராஜாஜி மார்க் 10ஆம் எண் வீடு நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கும் அவரின் உடைமைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அருங்காட்சியகமான இல்லம்: நெருங்கிய நண்பரும் பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டத்தின் பிதாமகனுமான சிவதாணுவின் அன்பான அறிவுறுத்தலால் ராமேசுவரத்தில் உள்ள தமது பூர்விக வீட்டில் ‘மிஷன் ஆஃப் லைஃப்’ எனும் அருங்காட்சியகத்தை அப்துல் கலாம் 2011இல் தொடங்கினார்.
கலாமைச் செதுக்கிய நூல்கள், அவர் அணிந்தி ருந்த மூக்குக்கண்ணாடி, எழுதுகோல், ஆடைகள், அவர் பயன்படுத்திய குறிப்பேடுகள் போன்ற அவரது அன்றாடத்துடன் பின்னிப்பிணைந்த எளிய, அதே நேரத்தில் இளம் தலைமுறையினருக்கு மாபெரும் உந்துசக்தியாக இருக்கக்கூடிய பொருள்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிறார் எளிதில் கண்டுகளிக்கும்படியாகக் கலாமின் அறிவியல், விண்வெளி ஆராய்ச்சிகளின் கருத்துகள் முப்பரி மாண வடிவத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
| அக்.15 - அப்துல் கலாம் பிறந்தநாள் |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT