Published : 12 Oct 2025 12:17 PM
Last Updated : 12 Oct 2025 12:17 PM

பள்ளி வாகனங்கள் மூலம் படிப்பை வசமாக்கிய பழங்குடியினர் நலத்துறை!

பழங்குடியினக் குடியிருப்புக்களில் கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும் நடவடிக்கையாக 2025 அக்டோபர் 6 அன்று வழங்கப்பட்ட புதிய வாகனங்களால் பழங்குடியின மாணவர்களின் படிப்பும் பள்ளி வருகையும் சேர்க்கையும் அதிகரித்துள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்ட 71 வாகனங்களில் உண்டி உறைவிடப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்துக்காக 26 வாகனங்களும், தொலை தூரப் பகுதிகளுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவை கொண்டு செல்ல 20 நடமாடும் மருத்துவ அலகுகளும் (MMU), அவசரகால உதவிகளுக்காக 25 ஆம்புலன்ஸ்களும் அடங்கும். பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து விரிவாக்கம், கடைக்கோடி பழங்குடியின பயனாளிகளுக்கான சேவையைச் சீராக வழங்குகிறது.

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில், நீண்ட காலமாகவே புவியியல் காரணிகள் முக்கிய பங்காற்றி வந்துள்ளன. கள்ளக்குறிச்சியின் கல்வராயன் மலை, நீலகிரியின் குக்கிராமங்கள் மற்றும் தருமபுரி, ஈரோட்டில் வனங்களுக்கு அருகில் வாழும் மாணவர்கள், பள்ளிக்குச் செல்ல பல மைல்கள் பயணிக்க வேண்டியிருந்தது.

மழைக்காலத்தில் பாதைகள் துண்டிக்கப்பட்டு, பள்ளி வருகை குறைவதுடன், இடைநிற்றல் விகிதமும் உயர்வது வாடிக்கையாக இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, மாநில அரசு ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் 'தொல்குடி திட்டம்' மூலம் பள்ளிக்கென 26 தனி வாகனங்களை திருச்சி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு வழங்க பழங்குடியினர் நலத்துறை நடவடிக்கை எடுத்தது.இதனால் 74 உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் 3600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவர். கல்வராயன்மலை இன்னாடு கிராமத்தில் இந்த வாகனப் போக்குவரத்து திட்டத்தை ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கியபோது, மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்த தையும், இடைநிற்றல் குறைந்ததையும் கண்டறிய முடிந்தது.

இதையடுத்து இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. பள்ளிக்கும் வீட்டுக்குமான தூரம் அதிகம் என்ற காரணத்துக்காக கல்வி கிடைப்பது தடை படக்கூடாது என்ற சமத்துவக் கொள்கை யைச் செயல்படுத்தும் பாலமாக இந்த வாக னங்கள் செயல்படுகின்றன. கல்வி பெறும் உரிமையுடன் போக்குவரத்து வசதி பெறும் உரிமையை இணைப்பதன் மூலம், பழங்குடியினப் பகுதிகளில் ஒருங்கிணைந்த கல்வி உள்கட்டமைப்பை தமிழ்நாடு மறுவரையறை செய்துள்ளது என்றால் மிகையல்ல.

சுடர் அமைப்பின் நடராஜன்: ஈரோடு பர்கூர்மலையில், தினமும் 6 கி.மீ. நடந்தே செல்ல வேண்டி இருப்பதால் கால் வலியில் பல மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தினர். வனவிலங்குகள் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பான போக்குவரத்து வசதி கோரி பழங்குடியினர் நலத்துறையில் கோரிக்கையை வைத்தோம்.

அதன் தொடர்ச்சியாக ஈரோட்டுக்கு 4 வாகனங்கள் கிடைத்தன. கொங்காடை அருகே, 2 ஆண்டுகளாகப் பள்ளிக்கு வராத வெள்ளிங்கிரி என்ற மாணவன் வாகனத்தைக் கண்டதும் ஓடி வந்து மீண்டும் பள்ளிக்கு வந்தான். இது வெறும் வாகனம் அல்ல; கல்விக்கான அணுகலை உறுதி செய்யும் சமூக நீதியின் சாட்சியம்.

முருகேசன்: என் மகன் நவீன், திருவண்ணாமலை ஆட்டியனூரில் உள்ள அரசு பழங்குடியினர் தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறான். நாச்சமலையில் இருந்து பள்ளிக்கு சுமார் 3.5 கி.மீ. தூரம் அடர்ந்த வனப் பாதையில் சுமார் 1 மணிநேரம் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியிருந்தது.

அவன் வரும்வரை கவலையுடன் காத்திருப்போம். இந்தப் பள்ளி வாகனம் எங்களுக்கு ஒரு நிம்மதியைக் கொடுத்துள்ளது. இப்போது, என் மகன் பாதுகாப்பாகவும், சோர்வின்றியும் பள்ளிக்குச் சென்று வருகிறான். இந்த அரிய திட்டத்துக்காக அரசுக்கு மனமார்ந்த நன்றி.

தங்கமணி (காளிதிம்பம்): எங்கள் ஊருக்கு பள்ளி வாகனம் வருவதால், கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்கு போகாத குழந்தைகள் கூட பள்ளி செல்ல தயாராகி விட்டனர். மூன்றே நாளில் 7 குழந்தைகள் தலைமலை உறைவிட தொடக்கப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். நான்கரை வயது குழந்தை ஒன்று அடம் பிடித்து மற்ற குழந்தைகளோடு பள்ளிக்குச் சென்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x