Published : 12 Oct 2025 12:51 AM
Last Updated : 12 Oct 2025 12:51 AM

950 மையங்​களில் தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு: 2.70 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்பு 

சென்னை ஷெனாய் நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: தமிழகம் முழு​வதும் 950 மையங்​களில் தமிழ் மொழி இலக்​கி​யத் திறனறி தேர்வு நேற்று நடை​பெற்​றது. பிளஸ் 1 மாணவர்​கள் 2.70 லட்​சம் பேர் தேர்வு எழு​தினர்.

பள்ளி மாணவர்​களிடம் தமிழ்​மொழி இலக்​கி​யத் திறனை மேம்​படுத்த, திறனறி தேர்வை பள்​ளிக்​கல்வி இயக்​ககம் நடத்​துகிறது. பிளஸ் 1 பயிலும் மாணவர்​கள் இந்த தேர்வை எழுதலாம். இதில், 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்​கள், எஞ்​சிய 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்​கள் மற்​றும் பிற தனி​யார் பள்ளி மாணவர்​கள் என அதிக மதிப்​பெண் பெறும் 1,500 பேர் தேர்வு செய்​யப்​படு​வார்​கள். அவர்​களுக்கு 2 ஆண்​டுக்கு மாதம்​தோறும் ரூ.1,500 கல்வி உதவித்​தொகை வழங்​கப்​படும்.

இந்​நிலை​யில், நடப்பு கல்வி ஆண்​டுக்​கான தமிழ்​மொழி இலக்​கி​யத் திறனறி தேர்வு தமிழகம் முழு​வதும் 950 மையங்​களில் நேற்று காலை 10 முதல் மதி​யம் 12 மணி வரை நடை​பெற்​றது. 2.70 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழு​தினர். சென்​னை​யில் அசோக் நகர் அரசு பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி, திரு​வல்​லிக்​கேணி என்​கேடி. பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி, சாந்​தோம் மேல்​நிலைப் பள்​ளி, ஷெனாய் நகர் மாநக​ராட்சி மேல்​நிலைப் பள்ளி உள்​ளிட்ட மையங்​களில் ஏராள​மானோர் ஆர்​வத்​தோடு தேர்வு எழு​தினர். இந்த தேர்​வுக்​கான உத்​தேச விடைகள் ஓரிரு நாளில் வெளி​யிடப்​படும். அதன்பிறகு தேர்வு முடிவு​கள் வெளி​யாகும் என்​று அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x