Published : 27 Sep 2025 07:49 AM
Last Updated : 27 Sep 2025 07:49 AM
வேலூர்: இந்தியா வளர்ந்த நாடாக மாறுதவதற்கு அறிவியல் தொழில் நுட்பத்தில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் கூறினார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ‘கிராவிடாஸ்-2025’ என்ற தொழில்நுட்ப அறிவுசார் திருவிழா நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 207 நிகழ்வுகள், 57 பயிற்சி பட்டறைகள், 51 ஹேக்கத்தான், ரோபோ வார், ட்ரோன் ஷோ உள்ளிட்டவற்றில் 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது: 1984-ல் 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனத்தில் தற்போது 1 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும்.
ஆனால், கட்டிடம், ஆய்வகம், ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாக இருப்பதால், மாணவர் சேர்க்கையை அரசு கட்டுப்படுத்துகிறது. இந்நிலை மாறி, ஏழை, நடுத்தர மக்கள் அதிக அளவில் உயர் கல்வி பெற வேண்டும். இந்தியா வளர்ந்த நாடாக மாற அறிவியல், தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும். மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.
அபுதாபி சிறிய நாடாக இருந்தாலும், பொருளாதாரத்தில் வளம் பெற்ற நாடாக உள்ளது. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் உள்ளூர் மக்கள். மீதமுள்ள 80 சதவீதம் பேர் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 1 டிரில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்க்கின்றனர். அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அபுதாபி அமைச்சர்... இந்நிகழ்வை தொடங்கிவைத்து அபுதாபி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மஜித் அலி அல் மன்சூரி பேசும்போது, “செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, பருவநிலை மாற்றம் ஆகிய சவால்களுக்கு மாணவர்கள் தீர்வுகாண வேண்டும். புதுமை என்பது தொழில்நுட்பத்தை மட்டும் மாற்றுவது அல்ல, மனித குல வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில், கவுரவ விருந்தினர்களாக பிரவீனா பீமவரப்பு, ஆனந்த் நரசிம்மன் ஆகியோர் பங்கேற்றனர். விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டரெட்டி, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT