Published : 22 Sep 2025 12:28 AM
Last Updated : 22 Sep 2025 12:28 AM
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில் விவரங்களை சரிசெய்ய வேண்டுமென தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் மார்ச் - ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் எமிஸ் தளத்தில் மாணவர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்க வேண்டும். அதில் திருத்தங்கள் இருந்தால் அக்டோபர்) 6 முதல் 23-ம் தேதி வரை அவற்றை மேற்கொள்ள வேண்டும். மாணவரின் பெயர், பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறே இருக்க வேண்டும். அரசிதழில் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே அதன் நகலை பெற்று அதன் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
பாஸ்போர்ட் புகைப்படம்: சமீபத்தில் எடுக்கப்பட்ட மாணவருடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்யவேண்டும். இதுதவிர, தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதனால் பதிவேற்றம் செய்யப்படும் செல்போன் எண் சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தேர்வில் சலுகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் அதற்குரிய ஆவணங்களுடன் இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பின்னர் சலுகை கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரிசீலிக்கப்படமாட்டாது. மேலும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பின்னர் திருத்தங்கள் கோரி தேர்வுத்துறைக்கு அனுப்பக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT