Published : 17 Sep 2025 05:22 AM
Last Updated : 17 Sep 2025 05:22 AM
சென்னை: தமிழகத்தில் 350 இடங்கள் உட்பட நாடு முழுவதும் கூடுதலாக 6,850 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22-ம் தேதி வரை https://mcc.nic.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் நடைபெற்றது.
மீதமுள்ள இடங்கள் மற்றும் முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றும் கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்பட்டுள்ள இடங்களை நிரப்புவதற்கான 2-ம் சுற்று கலந்தாய்வு கடந்த 4-ம் தேதி ஆன்லைனில் தொடங்கியது. கலந்தாய்வு வரும் 19-ம் தேதி வரை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கூடுதல் இடங்களை சேர்க்க இருப்பதாலும், என்ஆர்ஐ ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாலும், 2-ம் கட்ட கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, 2-ம் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் செப்.10-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அகில இந்திய கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மாநில கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் கூடுதல் மருத்துவ இடங்கள் அனுமதிக்கான கல்லூரிகள் பட்டியலை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் என 350 எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 6,850 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மருத்துவ இடங்கள் எண்ணிக்கை 1,23,700 ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT