Published : 16 Sep 2025 07:06 AM
Last Updated : 16 Sep 2025 07:06 AM
சென்னை: தேசிய திறந்தநிலை பள்ளி திட்டத்தில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வு கட்டுட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்பாஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளிக்கல்வியை பொருத்தவரையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் சிபிஎஸ்இ, தேசிய திறந்தநிலை பள்ளி (என்ஐஓஎஸ்) என இரு வகையான கல்வித் திட்டங்கள் உள்ளன.
சிபிஎஸ்இ கல்வி முறையில், பாடங்கள் நேரடி முறையிலும், தேசிய திறந்தநிலை பள்ளி கல்வி திட்டத்தில் தொலைநிலைக் கல்வி முறையிலும் நடத்தப்படுகின்றன. சிபிஎஸ்இ முறையில் 10-ம் வகுப்பு என்பது 9 மற்றும் 10-ம் வகுப்பு என இரு ஆண்டு படிப்பாகும். அதேபோல், 12-ம் வகுப்பு என்பது 11 மற்றும் 12-ம் வகுப்பு என இரு ஆண்டு படிப்பு.
ஒரு மாணவர் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுத வேண்டுமானால் அவர் 2 ஆண்டு காலம் பாடங்களை படித்திருக்க வேண்டியது அவசியம். அதோடு குறைந்தபட்சம் 75 சதவீத வருகைப்பதிவும் கட்டாயமாகும்.
மேலும், சிபிஎஸ்இ-யில் அகமதிப்பீடு முறையும் உண்டு. அந்த வகையில், ஒரு மாணவர் நேரடியாக பள்ளிக்கு செல்லவில்லை எனில் அகமதிப்பீடு மேற்கொள்ள முடியாது. அகமதிப்பீடு இல்லாதபோது ஒரு மாணவரின் தேர்வு முடிவை வெளியிட இயலாது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாய பாடங்களுடன் கூடுதலாக 2 பாடங்களையும், 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கூடுதலாக 5 பாடங்களையும் தேர்வுசெய்து படிக்கலாம். கூடுதல் பாடங்களை படிப்பதற்கான ஆசிரியர்கள், ஆய்வக வசதி அந்த பள்ளியில் இருக்க வேண்டும்.
அவ்வாறு வசதிகள் இல்லாவிட்டால் மாணவர்கள் விரும்பினாலும் கூடுதல் பாடங்களை படிக்க இயலாது. மேற்கண்ட நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படாத பட்சத்தில் எந்தவொரு மாணவரும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் கூடுதல் பாடங்களில் தனித்தேர்வராக தேர்வெழுத முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT