Published : 12 Sep 2025 06:01 AM
Last Updated : 12 Sep 2025 06:01 AM
சென்னை: ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளுக்கு இன்று (செப். 12) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26-ம் கல்வியாண்டில் கார்டியோசோனோகிராஃபி, ஈசிஜி, ட்ரெட்மில், இதய அறுவை சிகிச்சை ஆய்வகம், அவசர சிகிச்சைப் பிரிவு, சுவாச சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ், மயக்க மருந்து, ஆபரேஷன் தியேட்டர், முடநீக்கியல் பிரிவு, மருத்துவப் பதிவு போன்றவற்றில் டெக்னீஷியனாக பணிபுரிவதற்கான ஓராண்டு சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நடப்பாண்டில் சான்றிதழ் பாடப்பிரிவுகளுக்காக ஓமந்தூராரில் 240 காலியிடங்களும், ஸ்டான்லியில் 393 காலியிடங்களும் உள்ளன. இந்த பாடப்பிரிவுகளுக்கு மாவட்ட அளவிலான சேர்க்கைக்கும், முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கைக்கும் தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பதாரர்கள் 17 வயது நிறைவடைந்து 10-ம் வகுப்பு அல்லது மேல்நிலைப் பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
தகுதியுள்ள நபர்கள் இம்மருத்துவமனைகளில் உள்ள இயக்குநர் அலுவலகங்களில் கட்டணமின்றி வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து இன்று (செப். 12) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதிப் பட்டியல் வரும் 16-ம் தேதி வெளியிடப்பட்டு, செப். 20 முதல் சேர்க்கை நடைபெறும். செப். 22 முதல் மீதமுள்ள இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும். அக். 6-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் கூடுதல் விவரங்களுக்கு https://tngmssh.gov.in மற்றும் https://stanleymedicalcollege.in/ என்ற இணையதளங்களையும், 044-25666000, 9840505701 என்ற தொலைபேசி எண்களையும், tngmssh@gmail.com, stanleycollege19@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT