Published : 11 Sep 2025 05:44 PM
Last Updated : 11 Sep 2025 05:44 PM
சென்னை: உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்க்கரை, எண்ணெய் பொறித்த உணவு பொருட்கள் குறித்த அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டுமென கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமாக உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இந்தியாவில் உடல் பருமன் தீவிர பொது சுகாதார பிரச்சினையாக இருக்கிறது என சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உடல் பருமன் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இளைய தலைமுறையினர் உடல் பருமனை கையாள்வது ஆரோக்கியமான எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு முக்கியமானது.
பழங்கள், காய்கறி, குறைந்த அளவிலான புரதங்கள், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவுகளை சாப்பிடும்போது அது அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இளைஞர்களிடம் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஊக்குவிக்க, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சர்க்கரை, எண்ணெய் பொறித்த உணவு பொருட்கள் குறித்த தகவல்களை அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும்.
அந்த பலகையில் அன்றாட உணவுகளில் மறைக்கப்பட்டுள்ள கொழுப்புகள், சர்க்கரைகள் பற்றிய விவரங்கள் இடம்பெற வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் உணவுகளை கவனத்துடன் தேர்வு செய்வார்கள்.
இதை கல்வி நிறுவனங்களின் உணவகங்கள், கூட்ட அறைகள் போன்ற மாணவர்கள் பார்க்கும் வகையில் வைக்கவேண்டும். அதேபோல், உடல் பருமனை தடுக்க போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், உடற்பயிற்சி சார்ந்த பயிலரங்குகளை நடத்த வேண்டும். இதை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT