Published : 10 Sep 2025 05:56 AM
Last Updated : 10 Sep 2025 05:56 AM
சென்னை: சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.
அவரது பரிந்துரைகளை செயல்படுத்தும் வகையில் பள்ளிகளில் சாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும் ஆசிரியர் மீது பெறப்படும் புகார் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்.
மாணவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை மூலம் வழங்கக்கூடிய கல்வி உதவித் தொகை விவரங்கள் ரகசியமாகப் பராமரிக்கப்படுவது அவசியம். மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் ‘மகிழ் முற்றம்’ குழு திட்டத்தை பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்கள் கைபேசி பயன்படுத்துவது தெரிய வந்தால், அதை பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகளில் திருக்குறள் அறநெறி வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். ‘மாணவர் மனசு’ புகார் பெட்டியை வாரம் ஒரு முறை பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து அதில் உள்ள தபால்களின் எண்ணிக்கையை பதிவு செய்து, அதுகுறித்து விசாரணை செய்து மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT