Published : 08 Sep 2025 12:21 AM
Last Updated : 08 Sep 2025 12:21 AM
சென்னை: விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் நலனுக்காக அந்த துறைசார்ந்த 5 புதிய படிப்புகளை தேசிய திறந்தநிலை பள்ளி அறிமுகம் செய்யவுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் (NIOS- National Institute of Open Schooling) பள்ளிக் கல்வியை தொலைநிலை வழியில் பயிற்றுவித்து வருகிறது. அதனுடன், திறன் மேம்பாட்டுக்கான தொழிற் படிப்புகளையும் வழங்குகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் இதன் வாயிலாக பலன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் என்ஐஓஎஸ் சென்னை மண்டல இயக்குநர் வி.சந்தானம் கூறியதாவது: கற்றலில் ஆர்வமில்லாத மாணவர்கள் பலர் விளையாட்டு, இசை போன்ற பிற துறைகளில் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். அத்தகைய மாணவர்கள் நலனுக்காக உடற்கல்வி மற்றும் இசைத் துறைகள் சார்ந்த பிரத்யேக படிப்புகளை என்ஐஓஎஸ் உருவாக்கி வருகிறது.
முதல்கட்டமாக விளையாட்டுத் துறைசார்ந்து 5 புதிய படிப்புகள் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அந்த வகையில் 10-ம் வகுப்புக்கு யோகா, விளையாட்டு மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், ஊட்டச்சத்து ஆகிய 3 பாடங்களும், பிளஸ் 2 வகுப்புக்கு யோகா அறிவியல் மற்றும் விளையாட்டு மேலாண்மை ஆகிய 2 பாடங்களும் புதிதாக கொண்டுவரப்பட உள்ளன. இதற்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இத்திட்டம் அமலானால் விளையாட்டு திறனுள்ள மாணவர்கள் பள்ளிக்கல்வியில் எளிதில் தேர்ச்சி பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT