Published : 07 Sep 2025 12:44 AM
Last Updated : 07 Sep 2025 12:44 AM
சென்னை: மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கடைசியாக, கடந்த 2022-ம் ஆண்டுக்கான டெட் தேர்வு 2023 பிப்ரவரியில் நடத்தப்பட்டது. 2023, 2024-ம் ஆண்டுகளுக்கான டெட் தேர்வு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், 2025-ம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அன்றைய தினமே தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள் டெட் முதல் தாள் தேர்வுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் 2-ம் தாள் தேர்வுக்கும் விண்ணப்பித்து வருகின்றனர். நவம்பர் 15, 16-ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளன.
டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளை (செப்.8) நிறைவடைகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இடைநிலை ஆசிரியர்களும், பி.எட். முடித்த பட்டதாரி ஆசிரியர்களும் https://trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெறும் இறுதி ஆண்டு மாணவர்கள், பி.எட். இறுதி ஆண்டு படிப்பவர்களும் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. எனவே, ஆசிரியர்கள் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT