Published : 07 Sep 2025 12:38 AM
Last Updated : 07 Sep 2025 12:38 AM
மேலக்கோட்டையூர்: மாணவர்கள் எத்தகைய வெற்றி அடைந்தாலும் பணிவுடன் இருக்க வேண்டும். அதேபோல் தோல்வி அடைந்தால் துவண்டுபோகக் கூடாது என சென்னையில் நடந்த விஐடி கல்வி நிறுவனத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவுரை வழங்கினார்.
விஐடி சென்னை கல்வி நிறுவனத்தின் 13-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தனர். விஐடி பல்கலைக்கழக துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் வரவேற்றார்.
விழாவில், கவுரவ விருந்தினராக வங்கதேச தூதரகத்தின்துணைத் தூதர் ஷெல்லி சலேஹின் பங்கேற்றார். விழாவில், 39 பேருக்கு தங்கப் பதக்கம் உட்பட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: தமிழகத்தில் மின்னணு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்காண பெண்கள் வேலை செய்கிறார்கள். தற்போது வேலை மற்றும் திறனை மேம்படுத்துவது மட்டுமே கல்வியாக இருக்கிறது. அதை சற்று மாற்ற வேண்டும். தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சட்டம், வரலாறு, இலக்கியம் போன்ற துறைகளும் இருப்பது முக்கியம்.
வாழ்வில் வெற்றி நிரந்தரமல்ல, தோல்வி ஈடுசெய்ய முடியாததும் அல்ல. எனவே, மாணவர்கள் வாழ்வில் எத்தகைய வெற்றியை அடைந்தாலும் பணிவுடன் இருக்க வேண்டும். அதேபோல, தோல்வி அடைந்தால் துவண்டு போகக்கூடாது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
வங்கதேச தூதரகத்தின் துணைத் தூதர் ஷெல்லி சலேஹின் பேசும்போது, "திறமை மட்டுமின்றி, நற்குணமும், நேர்மையும் இளைஞர்களுக்கு முக்கியம். வாழ்வில் நிச்சயமற்ற தன்மைஇருந்தாலும், தைரியமாக எதிர்கொள்ளுங்கள். அது வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்" என்றார்.
வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, "உயர்கல்வி மூலம் மட்டுமே 2047-க்குள் இந்தியா உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்க முடியும். ஆனால், உயர்கல்வி சேர்க்கை விகிதம் 28 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்நிலை மாற வேண்டும்" என்றார். விழாவில் 6,468 இளங்கலை, முதுகலை மாணவர்கள், 113 ஆராய்ச்சி மாணவர்கள் என மொத்தம் 6,581 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இணை துணைவேந்தர் டி.தியாகராஜன், விஐடி வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன், விஐடி வேலூர் இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மாலிக், விஐடி பதிவாளர் டி.ஜெயபாரதி, கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT