Published : 06 Sep 2025 05:55 AM
Last Updated : 06 Sep 2025 05:55 AM
சென்னை: தமிழக கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 109 பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் செம்மல் விருதுகளை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம் வழங்கினார்.
கல்வியில் புதுமையை புகுத்தி சிறப்பாக பணியாற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று தமிழக கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ஆண்டுதோறும் ஆசிரியர் செம்மல் விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஆசிரியர் தினமான நேற்று தி.நகரில் உள்ள வாணி மகாலில் நடந்தது. தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், தியாக பிரம்ம கான சபா சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், ‘ஆசிரியர் செம்மல்’ விருதுகளை 109 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம் வழங்கினார்.
தமிழக கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.பெரியண்ணன் தலைமையுரை ஆற்றி பேசும்போது, "கடந்த 23 ஆண்டுகளாக எங்கள் அமைப்பு சார்பில் ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களை பாராட்டி விருது வழங்கி கவுரவித்து வருகிறோம். இந்த விருது, அவர்களுக்கு உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும்" என்றார்.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் எம்முரளி வாழ்த்திப் பேசினார். முன்னதாக, தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் வல்லுநர் வஜ்ரவேலு வரவேற்றார். செயல் இயக்குநர் முருகையன் பக்கிரிசாமி அறிமுகவுரை ஆற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT