Published : 05 Sep 2025 06:37 PM
Last Updated : 05 Sep 2025 06:37 PM
புதுச்சேரி: அரசின் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் கூடுதல் கட்டணம் கட்ட முடியாமல் ஏழை அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் தவிக்கிறார்.
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் அய்யனார் - அஞ்சலை தம்பதியினர். இவர்களது இளைய மகன் ராஜ குரு. கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கடந்த நீட் தேர்வில் 147 மதிப்பெண்கள் பெற்றார். புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.
இதன் மூலம் புதுச்சேரி அரசு ரூ.4 லட்சம் கல்விக் கட்டணம் செலுத்தும். ஆனால் மாணவனுக்கு கல்லூரியில் கூடுதல் கட்டணமாக புத்தகக் கட்டணம், கிளினிக்கல் கட்டணம், சீருடை கட்டணம், பேருந்து கட்டணம் என்று குறைந்தது ரூ.2 லட்சம் தேவைப்படும். ஆனால் போதிய பணமின்றி கட்ட இயலாத நிலையில் ஏழை மாணவன் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இது குறித்து மாணவன் ராஜகுரு கூறுகையில், "தந்தை அய்யனார் உடல் ஊனமுற்று வீட்டிலேயே உள்ளார். மாணவனின் தாய் சிறு வயது உள்ள போதே இறந்து விட்டார். பாட்டி பராமரிப்பில் வளர்ந்தேன். மருத்துவம் படிக்க ஆசை. ஆனால், போதிய பணம் திரட்ட முடியாமல் உள்ளது. உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.” என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் மாணவர் சீருடை கட்டணத்தை ஏற்ற சென்டார் மாணவர் பெற்றோர் சங்கத்தின் தலைவர் நாராயணசாமி, "ஏழை மாணவர் மருத்துவக் கல்வி படிக்க தன்னார்வலர்கள் உதவ வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். மாணவருக்கு தேவையான நிதியை திரட்டவும் முயற்சி எடுக்கப்படுகிறது. மாணவர் ராஜகுருவின் தொடர்பு எண்: 90430 26773.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT