Published : 05 Sep 2025 02:53 PM
Last Updated : 05 Sep 2025 02:53 PM
மாற்றுக் கல்விமுறைகளில் ஒன்றான மாண்டிசோரி, இத்தாலியைச் சேர்ந்த மருத்துவரும் கல்வியாளருமான மரியா மாண்டிசோரியால் உருவாக்கப்பட்டது. அவரது பெயரே இந்தக் கல்வி முறைக்கான பெயராக நிலைத்துவிட்டது.
இத்தாலியின் சிறிய நகரம் ஒன்றில் 1870இல் மரியா பிறந்தார். அந்நாளில் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட மிகச் சில துறைகளில் ஒன்றான ஆசிரியர் பணிக்குப் படிக்கும்படி மரியாவின் தந்தை சொன்னார். தந்தையின் விருப்பத்துக்கு எதிராக மருத்துவப் படிப்பில் சேர்ந்தார் மரியா.
இத்தாலியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த முதல் பெண் என்கிற பெருமையையும் அவர் பெற்றார். பாலினப் பாகுபாடு, சமூக ஒடுக்குமுறை போன்றவற்றோடு போராடி மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, சிறப்புக் குழந்தைகள் மத்தியில் பணியாற்றினார். பலவிதமான குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளியின் இணை இயக்குநராகப் பொறுப்பேற்றதுதான் மரியாவின் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. தொழில்முறை மருத்துவராக இருந்தவர், அதன் பிறகு கல்வியாளராகவும் பரிணமித்தார்.
வழக்கமான பொதுக்கல்வியில் விடுபட்டுப் போகும் குழந்தைகளையும் உள்ளடக்கியதாகக் கல்வி முறை இருக்க வேண்டும் என்பது மரியாவின் வாதம். கற்றல் என்பது நிர்பந்தமாக இல்லாமல் இயல்பாக நிகழ வேண்டும் என்று சொன்னதோடு, கற்றல் கருவிகளையும் அவர் அறிமுகப்படுத்தினார். ஆசிரியர் - மாணவர் என்கிற நிலையை மாற்றி குழந்தைகளே கற்கும் படியான கல்வி முறையை அவர் அறிமுகப் படுத்தினார். குழந்தைகளை மையப்படுத்திய அந்தக் கல்விமுறையே மாண்டிசோரி கல்வி முறை.
குழந்தைகளின் உடல், உணர்வு, சமூகம், அறிவாற்றல் ஆகியவை சார்ந்த ஒட்டுமொத்த வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது மாண்டிசோரி கல்வி முறை. அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவக் கல்வி முறையையும் சமூக நீதியையும் அடிப்படையாகக் கொண்டது இது. குழந்தைகளே விரும்பிக் கற்பதற்கான வழிமுறைகளைக் கொண்டது. ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சியோடு மற்றவர்களின் வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்ட கல்வி முறை இது.
இதில் குழந்தைகள் இதைத்தான் படிக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. எந்தப் பாடத்தைப் படிக்க விரும்புகிறார்களோ அந்த வகுப்புக்குச் சென்று படிக்கலாம். வயது வேறுபாடின்றி பல வயதுடைய குழந்தைகளும் ஒரே வகுப்பில் அமர்ந்து கற்கலாம். ஆசிரியர் மேற்பார்வையில் குழந்தைகள் அவர்களாகவே கற்பதும் இதில் உண்டு. பார்த்து, கேட்டு, தொட்டு உணர்ந்து எனப் பலவகைகளிலும் கற்றல் நிகழ்வதால் அனைத்தையும் குழந்தைகளால் முழுவதுமாக உள்வாங்கிக் கற்க முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT