Published : 02 Sep 2025 05:25 AM
Last Updated : 02 Sep 2025 05:25 AM
சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணிக்கு 560 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் புதிதாக 15 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தேவைக்கேற்ப, கலை, அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு பாடப் பிரிவுகளில் புதிதாக 15 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் நிரந்தர உதவி பேராசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை, மாணவர்களின் கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க, கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக நியமிக்க, இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் 28 வரை அந்தந்த மண்டலங்களில் நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணல் முடிந்துள்ள நிலையில், தேர்வு செய்யப்பட்டுள்ள 560 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பட்டியல், இணையதளத்தில் (tngasa.org) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வானவர்கள் தங்களது பயனர் குறியீடு (User ID), கடவுச்சொல் (Password) பயன்படுத்தி, தாங்கள் தேர்வான கல்லூரி மற்றும் விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சம்பந்தப்பட்ட கல்லூரியில் செப்டம்பர் 8-ம் தேதிக்குள் அவர்கள் பணியில் சேர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT