Published : 28 Aug 2025 11:57 PM
Last Updated : 28 Aug 2025 11:57 PM
சென்னை: பொறியியல் பட்டப் படிப்பில் புதிய தொழில்நுட்ப பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் ஜப்பான், ஜெர்மன், கொரிய மொழிகள் கற்கவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழகம், தனது இணைப்புக் கல்லூரிகளில் பொறியியல் பட்டப்படிப்பில் (பிஇ, பிடெக்) புதிய தொழில்நுட்ப பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாடங்கள், வளர்ந்து வரும் தேவைகள் மற்றும் உலகளாவிய கல்வி மாற்றங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இது, மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்தும்.
புதிய பாடத் திட்டத்தின் முக்கிய அம்சமாக பொருள் மேம்பாடு (Product development) என்பதை குறிக்கோளாகக் கொண்டு 5-வது செமஸ்டரில் இருந்து டிசைன் புராஜெக்ட் என்ற பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பெறப்படும் மதிப்பெண்களையும் சேர்த்து 8.5 மற்றும் அதற்கு மேல்சிஜிபிஏ பெற்றவர்களுக்கு பொறியியல் பட்டத்துடன் கூடுதலாக சிறப்பு பட்டம் (ஆனர்ஸ் டிகிரி) மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இது, உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உதவும்.
உலகளாவிய வேலைவாய்ப்பு: மேலும், மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்துவதுடன், வெளிநாட்டு மொழிப் பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் ஜப்பான், ஜெர்மனி, கொரிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வுசெய்து கற்கலாம். உலகளாவிய வேலைவாய்ப்புகளை மேம்படுத்த இது துணைபுரியும்.
புதிய பாடத் திட்டத்தின்கீழ் மாணவர்கள் நடைமுறை பயன்பாடுகள் மற்றும் தொழில்துறை நடைமுறைகளை நன்கு அறிந்துகொள்ளும் வகையில் இரண்டு செமஸ்டர்களில் தொழில்துறை சார்ந்த பாடங்கள் இடம்பெறும். தற்போது மாறி வரும் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த பாடங்கள் புதிய பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றன. இதன்மூலம், மாணவர்கள் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ்போன்ற முன்னணி தொழில்நுட்பங்களில் அறிவுபெறுவர். மேலும்,உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை குறித்த பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்துடன், மாணவர்கள் வேகமாக மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்ளும் நோக்கில் முதல் 2 செமஸ்டர்களில்வாழ்வியல் திறன்கள் குறித்த பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் மாணவர்கள்உணர்ச்சி நுண்ணறிவு , நேர்மறைஎண்ணங்கள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளமுடியும். மேலும், முதல்முறையாக விளையாட்டுத்திறனை வளர்க்க உடற்கல்வி படிப்புகளும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட புதிய பாடங்கள் பொறியியல் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்பு வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் மட்டுமின்றி, அவர்கள் எதிர்கால சவால்களை ஆற்றலோடு எதிர்கொள்ளவும் பெரிதும் உதவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT