Last Updated : 28 Aug, 2025 05:55 PM

 

Published : 28 Aug 2025 05:55 PM
Last Updated : 28 Aug 2025 05:55 PM

சென்னை ஐஐடியில் இணையவழி தொழில்நுட்ப படிப்புகள்: இதுவரை 381 அரசுப் பள்ளி மாணவர்கள் பலன்!

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 381 அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியின் இணையவழி படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின்கீழ் சென்னை ஐஐடி பிஎஸ் தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழி படிப்புகளை 2022-ம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இதற்கென பிரத்யேக நுழைவுத் தேர்வை ஐஐடி நடத்துகிறது. அந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இந்த 2 படிப்புகளை இணையவழியில் படித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமுள்ள இந்த படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களை அதிகளவில் சேர்க்க ஏதுவாக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அதற்கான தகுதித் தேர்வுக்கு தயார்ப்படுத்தும் பணிகளும் தமிழக அரசால் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, சராசரியாக படிக்கும் மாணவர்களை இந்தப் படிப்பில் சேர்ப்பதற்கு பள்ளிக் கல்வித் துறை விரும்புகிறது. அவ்வாறு அடையாளம் காணப்படும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுவதற்கான கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்துகிறது.

இதுதவிர தேர்வில் தேர்வாகும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்களின் கல்வி கட்டணத்தில் 75 சதவீதத்தை ஐஐடியே வழங்குகிறது. மீதமுள்ள 25 சதவீதத்தை எஸ்சி, எஸ்டி மாணவர்களாக இருப்பின் அவர்களுக்கான கட்டணத்தை தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் செலுத்துகிறது.

மற்ற பிரிவினர் அந்த 25 சதவீத கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இணையவழி கற்றல் என்பதால் இதனுடன் சேர்த்து வேறு படிப்புகளையும் மாணவர்கள் தொடரலாம். அதாவது, ஒரேநேரத்தில் 2 பட்டப் படிப்புகளை மாணவர்கள் முடிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் 2022 முதல் இதுவரை 353 அரசுப் பள்ளி மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். தொடர்ந்து நடப்பாண்டிலும் இந்த படிப்புகளில் சேர 170 பேர் தகுதித் தேர்வை எழுதினர். அதில் 28 பேர் வெற்றி பெற்று, சென்னை ஐஐடியில் பிஎஸ் தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் படிப்புகளில் சேர இருக்கின்றனர்.

இதையொட்டி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்களின் துணையோடு அரசுப் பள்ளி மாணவர்ங்கள் கல்வியில் உயரங்களை எட்டிப் பிடித்து சாதனை படைக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x