Published : 27 Aug 2025 07:33 AM
Last Updated : 27 Aug 2025 07:33 AM
சென்னை: எஸ்சி அருந்தியர் பிரிவு ஒதுக்கீட்டு காலியிடங்களை எஸ்சி மாணவர்களைக் கொண்டு நிரப்ப நடத்தப்பட்ட பொறியியல் கலந்தாய்வில் 796 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அதை உறுதிசெய்யும் மாணவர்களுக்கு இன்று இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வும் அதைத் தொடர்ந்து துணை கலந்தாய்வும் நடந்து முடிந்துவிட்டன. கலந்தாய்வின்போது எஸ்சி அருந்ததியர் பிரிவில் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்கள் கலந்தாய்வு மூலம் எஸ்சி மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு எஸ்சி அருந்ததியர் பிரிவில் நிரப்பப்படாமல் 963 இடங்கள் உள்ளன. அதில் அகாடமிக் பிரிவில் 874 இடங்களும், தொழிற்கல்வி பொதுப்பிரிவில் 84 இடங்களும், அரசு கல்லூரி தொழிற்கல்வி பிரிவில் 5 இடங்களும் இடம்பெற்றுள்ளன. எஸ்சி - அருந்ததியர் பிரிவு காலியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வுக்கு 36,384 எஸ்சி மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர்.
அவர்களுக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று முன்தினம் (திங்கள்) தொடங்கியது) அதில் பங்கேற்று கல்லூரியை தேர்வு செய்தவர்களில் 796 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அவர்கள் இதை உறுதி செய்ய நேற்று இரவு 7 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
அதன்படி, தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்த மாணவர்களுக்கு இன்று (புதன்) காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். எஸ்சி அருந்ததியர் பிரிவு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்துவிட்டதாக தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT