Published : 26 Aug 2025 12:44 AM
Last Updated : 26 Aug 2025 12:44 AM
சென்னை: தமிழகத்தில் 2 ஆசிரியர்கள் உட்பட தேசிய அளவில் 45 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியராக பணியாற்றி குடியரசு தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் இந்திய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, வெள்ளிப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தின விழாவின்போது இவ்விருது வழங்கப்படும்.
இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய அளவில் மொத்தம் 45 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து 2 ஆசிரியைகள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி (சிபிஎஸ்இ பள்ளி) ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன், திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எம்.விஜயலட்சுமி ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், புதுச்சேரியில் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் வி. ரெக்ஸ் என்ற ராதாகிருஷ்ணனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது. டெல்லியில் செப்டம்பர் 5-ல் நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருதுகளை ஆசிரியர்களுக்கு வழங்கி கவுரவிக்கிறார்.
ஆசிரியைகள் பேட்டி: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள ஆசிரியை விஜயலட்சுமி கூறும்போது, ‘‘நான் கடந்த 27 ஆண்டுகளாக புவியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். எனக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நமது மாணவர்களை ஆளுமை மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பது எனது விருப்பம். பொதுவாகவே, எனது கற்பித்தல் வெறும் புத்தகத்துடன் இல்லாமல் கள ஆய்வை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும். கடந்த 2020-ம் ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்தது எனகு மிகுந்த ஊக்கத்தை அளித்தது” என்று குறிப்பிட்டார்.
ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன் கூறுகையில், ‘‘தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது. கடந்த 34 ஆண்டு காலமாக கணித ஆசிரியராகவும், 8 ஆண்டுகள் பள்ளி முதல்வராகவும் பணியாற்றி வருகிறேன். மாணவர்களுக்கு கணித பாடத்தை எப்படி எளிமையாக சொல்லித் தர முடியும் என்பதை குறித்துத்தான் தொடர்ந்து சிந்தித்து வருகிறேன். இது தொடர்பான சர்வதேச கருத்தரங்குகளிலும் பங்கேற்றுள்ளேன். கணிதம் பாடம் கடினம் என்ற கருத்து மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது. அதை போக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். எனது உழைப்புக்கு இந்த விருது மூலம் ஊக்கம் கிடைத்திருப்பதாக கருதுகிறேன்’' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT