Published : 25 Aug 2025 06:31 AM
Last Updated : 25 Aug 2025 06:31 AM
சென்னை: இந்தக் கல்வி ஆண்டு முதல் பாலிடெக்னிக் டிப்ளமா படிப்பில் கொள்குறி வகை வினா முறையை அமல்படுத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்
முடிவு செய்துள்ளது. இதனால், தொழில்நுட்பக்கல்வியின் தரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும் 400-க்கும் மேற்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் பொறியியல் பாடப்பிரிவில் 3 ஆண்டு கால டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆட்டோமொபைல் என வெவ்வேறு பாடப்பிரிவுகளில் ஏறத்தாழ ஒரு லட்சம் இடங்கள் உள்ளன. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாகவே பாலிடெக்னிக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்புவதில்லை. ஏறத்தாழ 50%இடங்களே நிரம்புகின்றன.
மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு முறை இருந்து வருகிறது. செமஸ்டர் தேர்வில் மொத்தமுள்ள 100 மதிப்பெண்ணில் 60 மதிப்பெண் தியரி தேர்வு, மீதமுள்ள 40 மதிப்பெண் இண்டர்னல் எனப்படும் அகமதிப்பெண் ஆகும். தியரி தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். தியரி தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு மாணவர்கள் விரிவாக விடை எழுத வேண்டும்.
இந்நிலையில், இதற்கு பதிலாக கொள்குறி வகை வினா முறையை நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது. இதனால் மாணவர்களின் படைப்பாற்றலையும், புரிந்துகொள்ளும் திறனையும், சிக்கல்களுக்கு தீர்வு காணும் திறனையும் மதிப்பிட முடியாது என்று ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: கொள்குறி வகை வினா முறையால் நினைவாற்றலைத்தான் சோதித்து அறிய முடியுமே தவிர பயன்பாட்டு அறிவையோ சிந்திக்கும் ஆற்றலையோ கண்டறிய முடியாது. அவர்களின் தொழில்நுட்பத் திறன் பாதிக்கப்படும். தொழில்நுட்பக் கல்வி என்பது படைப்பாற்றல், சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், படம் வரைவது, திட்டமிட்ட விளக்க முறை என பலவகை திறன்களை உள்ளடக்கியது. அப்படி இருக்கும்போது, கொள்குறிவகை வினா முறையால் இந்த திறன்களை எப்படி மதிப்பீடு செய்ய முடியும். அது குருட்டு மனப்பாடத்துக்கு மாணவர்களை அழைத்துச் செல்லுமே ஒழிய பாடங்கள் மீதான புரிதலை நிச்சயம் ஊக்குவிக்காது.
பாலிடெக்னிக் முடித்துவிட்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் அதற்கான பாடத்திட்டத்தில் 60 சதவீதம் படித்து முடித்தவர்களாக இருப்பர். ஆனால், தற்போது பாலிடெக்னிக் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதால், பொறியியல் பட்டப்படிப்பில் பாலிடெக்னிக் மாணவர்கள் தேர்ச்சி பெற சிரமப்படுகிறார்கள். இத்தகைய சூழலில் தற்போது அப்ஜெக்டிவ் முறையிலானகேள்வி- பதில் முறை அமல்படுத்தினால் மாணவர்கள் மேலும் பாதிக்கப்படுவர். இதனால், ஒட்டுமொத்த தொழில்நுட்பக் கல்வியின் தரமும் பாதிக்கும்.
பாலிடெக்னிக் முடித்து வெளியே வரும் மாணவர்கள் தொழில்நுட்பத்திறன் மிகுந்தவர்களாக இருக்க மாட்டார்கள். மாறாக தொழிலாளர் என்ற நிலையில்தான் இருப்பார்கள். வேண்டுமானால், தியரி தேர்வில் தலா 50 சதவீத கேள்விகளை கொள்குறிவகை வினா முறையிலும், விரிவாக பதில் எழுதும் வகையிலும் அமைக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT