Published : 25 Aug 2025 04:56 AM
Last Updated : 25 Aug 2025 04:56 AM
சென்னை: ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நிலையான வளர்ச்சி கவுன்சில் சார்பில் 5-வது சர்வதேச இளைஞர் மன்ற மாநாடு, தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆக. 21, 22-ம் தேதிகளில் நடைபெற்றது.
இதில் இந்தியா உட்பட 62 நாடுகளிலிருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டுக்கு தமிழகத்திலிருந்து 8 முதல் பிளஸ்-1 வகுப்பு வரை பயிலும் 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளில் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்த அறிவு, சிறந்த தகவல் தொடர்பு திறன் கொண்டவர்கள் பள்ளி சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் தமிழகத்தின் சிறந்த செயல்பாடுகளை ஒரு நிமிட வீடியோவாகவும் சமர்ப்பித்தனர். இதில் பள்ளிக்கல்வித் துறையால் தேர்வு செய்யப்பட்ட தலா 3 மாணவ, மாணவிகள், ஒரு ஆசிரியர் அரசுப் பள்ளிகள் சார்பில் பாங்காக்குக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்படி தேர்வு செய்யப்பட்ட வேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ச.நிஷாந்தினி, தஞ்சாவூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி மா.தரணிஸ்ரீ, நாமக்கல் கீரம்பூர் மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி யாழினி, சேலம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் அஷ்வாக், நாமக்கல் குமாரப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் கமலேஷ், செங்கல்பட்டு கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ராகுல் ஆகியோர் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் பிராண்டு தூதராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இது தமிழக அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு கிடைத்த மிகச்சிறந்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT