Published : 21 Aug 2025 06:39 AM
Last Updated : 21 Aug 2025 06:39 AM
சென்னை: போதைப் பொருள் பயன்பாடுகளை தடுத்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தினார். தமிழகத்தில் 13,903 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், போதை எதிர்ப்பு மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மன்றங்களில் உள்ள மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளிலும் ஓவியப் போட்டிகள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு சார்ந்த புத்தாக்க பயிற்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12-ம் மாணவர்களிடம் வாழ்வியல் திறன்களுடன் அவர்களின் பன்முகத் திறன்ககளை வெளிப்படுத்துவதற்கான கலைப் பட்டறையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, போதையில்லா தமிழகம் எனும் தலைப்பில் மாணவர்கள் வரைந்த ஓவியங்களை அமைச்சர் மகேஸ் பார்வையிட்டார். அதில் சிறந்த ஒவியங்களை வரைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: பள்ளி மாணவர்களிடம் போதைப் பொருள்கள் பயன்பாட்டை தடுப்பதற்காக, பல்வேறு முன்னெடுப்புகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, மாணவர்களிடையே போதைக்கு எதிரான சிந்தனையை உருவாக்க ஓவியப் போட்டி கலைப்பட்டறை என்ற பெயரில் நடத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலுள்ள போதை எதிர்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பயிற்சி வழங்கி மாணவர்களுக்கு கலைப்பட்டறை செயல்பாடுகள் செயல்படுத்தப்படவுள்ளது. வாழ்வியல் திறன் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு அரசின் சார்பில் ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
போதையில்லா தமிழகத்தை உருவாக்க காவல் துறை மட்டும் நடவடிக்கை மேற்கொண்டால் போதாது. அவர்களுடன் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தேர்வுத் துறை இயக்குநர் கே.சசிகலா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT