Published : 21 Aug 2025 06:05 AM
Last Updated : 21 Aug 2025 06:05 AM

14 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு: பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியீடு

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் 14 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: நடப்பு கல்வியாண்டில் (2025-26) 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி கரையவெட்டி (அரியலூர்), சிறுக்களஞ்சி (ஈரோடு), மேட்டுநாசுவம்பாளையம் (ஈரோடு), நத்தம் (கடலூர்), பாப்பநாயக்கன் பாளையம் (திருப்பூர்), மேல்செட்டிப் பட்டு (திருவண்ணாமலை), ஒட்டியம்பாக்கம், கீரப்பாக்கம் (செங்கல்பட்டு), காந்திநகர் (ஊட்டி), காணை (விழுப்புரம்), விருதுநகர், அணைக்கட்டுச்சேரி, சீனிவாசபுரம் (திருவள்ளூர்), கொடிக்குளம் (மதுரை) ஆகிய 14 இடங்களில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளிகள் தற்போது உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதுதவிர அங்கிருந்த 1 முதல் 5-ம் வகுப்புகள் பிரிக்கப்பட்டு தனி தொடக்கப் பள்ளிகளாக நிலை உருவாக்கப்படுகின்றன. தரம் உயர்த்தப்பட்டுள்ள 14 பள்ளிகளில் தலா 3 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். இன்னும் தலா 2 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப் பட்டுள்ளன. இவற்றை உபரி ஆசிரியர்களின் பணிநிரவல் மூலம் நிரப்பலாம். அந்த பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக நிலை உயர்த்தப்படுகிறது.

அதேபோல், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொடக்கப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு இணையான இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை பொதுத்தொகுப்புக்கு சரண் செய்யலாம். தரம் உயர்த்தப்பட்ட பின்னர் இந்த பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பணிகளுக்கான ஒட்டுமொத்த செலவீனங்களுக்காக ரூ.3.84 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x