Published : 18 Aug 2025 05:40 AM
Last Updated : 18 Aug 2025 05:40 AM
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு சாரணர் இயக்கத்துக்கு புதிய தலைமை அலுவலகம் நவீன வசதிகளோடு ரூ.8.94 கோடியில் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: பள்ளி மாணவர்களை அதிக அளவில் சாரணர் இயக்கத்தில் சேர்க்கும் வகையில் மேலும் பல ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக, தமிழ்நாடு சாரணர் இயக்கத்துக்கு புதிய தலைமை அலுவலகம் நவீன வசதிகளுடன் ரூ.10 கோடியில் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப். 2-ம் தேதி அறிவித்தார்.
அதன்படி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரத சாரணர் இயக்க தலைமை வளாகத்தில் நவீன பயிற்சி வசதிகளோடு, புதிய தலைமை அலுவலக கட்டிடம் கட்ட நிர்வாக அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தரை மற்றும் 3 தளங்களுடன் இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது. தரைத் தளத்தில் வாகன நிறுத்துமிடம், உபகரணங்கள் வைக்கும் அறை, பாதுகாவலர் அறை, பொது கழிப்பறையும், முதல் தளத்தில் 7 விருந்தினர்கள் அறை, 2 முக்கிய விருந்தினர்கள் அறை, 2 சிறப்பு அறைகள், சேமிப்பு அறையும் அமைக்கப்படும்.
2-வது தளத்தில் நிர்வாக அலுவலகம், பதிவேடு அறை, மாநில செயலாளர் அறை, ஓய்வறை, கழிப்பறையும், 3-வது தளத்தில் மாநாட்டுக் கூடம், முக்கிய நபர்களுக்கான ஓய்வறை, மாநில தலைமை ஆணையர் அறை, சாரணர்களை வழிப்படுத்தும் அறையும் அமைக்கப்படும். இதற்காக ரூ.8 கோடியே 93 லட்சத்து 81,199 செலவிடப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT