Last Updated : 12 Aug, 2025 02:00 PM

2  

Published : 12 Aug 2025 02:00 PM
Last Updated : 12 Aug 2025 02:00 PM

மாணவர் சேர்க்கை இல்லை என்று கூறி 207 அரசுப் பள்ளிகளை மூடுவதா? - அன்புமணி கண்டனம்

சென்னை: தமிழகத்தில் 35 மாவட்டங்களைச் சேர்ந்த 207 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் கூட இல்லை என்று கூறி, அப்பள்ளிகளை திமுக அரசு மூடி வருவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 35 மாவட்டங்களைச் சேர்ந்த 207 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் கூட இல்லை என்று கூறி, அப்பள்ளிகளை திமுக அரசு மூடி வருவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக, பள்ளிகளின் கல்வித்தரத்தை வீழ்ச்சியடையச் செய்து அவற்றுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

கடந்த சில பத்தாண்டுகளாகவே தனியார் பள்ளிகள் எண்ணிக்கையிலும், மாணவர் சேர்க்கையிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதிலும், அதனால் அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது என்பதிலும் ஐயமில்லை.

இப்போது மொத்தமுள்ள 37,554 அரசு பள்ளிகளில் 52.75 லட்சம் மாணவர்கள் மட்டுமே பயின்று வரும் நிலையில், அதைவிட அதிகமாக 12,970 தனியார் பள்ளிகளில் 63.42 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலை உருவாகியுள்ளது. பல தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்ற நிலையும், பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் பயிலும் நிலைமையும் ஏற்பட்டிருப்பது உண்மை தான்.

ஆனால், இதற்கான தீர்வு அரசு பள்ளிகள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பது தானே தவிர, பள்ளிகளை மூடுவது அல்ல. தொடக்கக் கல்வித்துறை சார்பில் 22,831 தொடக்கப் பள்ளிகளும், 6,587 நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரே ஒரு பிரிவு இருப்பதாக வைத்துக் கொண்டாலும், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 851 வகுப்பறைகள் இருக்க வேண்டும்.

ஆனால், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை வெறும் 65,000 மட்டும் தான். இதனால், ஒரு லட்சத்திற்கும் கூடுதலான வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இத்தகைய சூழலில், அரசுப் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு சேர்ப்பார்கள்?

அரசு பள்ளிகளில் மாணவர்களே இல்லாவிட்டாலும் கூட, அந்தப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியரை நியமித்து, அது குறித்து உள்ளூர் மக்களிடம் பரப்புரை செய்து மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மாணவர்கள் இல்லை என்று கூறி பள்ளிகளை மூடிவிடக் கூடாது. இது அனைத்து மக்களுக்கும் அவர்கள் வாழும் பகுதிகளில் பள்ளிகளை அமைத்து இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டக் கடமையை நிறைவேற்றத் தவறும் செயலாகும். இதை அனுமதிக்க முடியாது.

திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு பள்ளிகள், கல்லூரிகளை சீரழித்து வருகிறது. தமிழ்நாடு எப்போதுமே கூடுதல் பள்ளிகளைத் திறந்தவர்களைத் தான் கொண்டாடி வருகிறதே தவிர, மூடியவர்களை அல்ல. இதை உணர்ந்து மூடப்பட்டு வரும் 207 பள்ளிகளையும் தொடர்ந்து நடத்தி, அங்கு கூடுதல் ஆசிரியர்களை நியமித்து மாணவர் சேர்க்கையை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திமுக அரசுக்கு தமிழக மக்கள் மூடுவிழா நடத்துவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x