Published : 11 Aug 2025 12:40 AM
Last Updated : 11 Aug 2025 12:40 AM
சென்னை: சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி செயல்படுகின்றன. அதேபோன்று, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன.
இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 320 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 48 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 272 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதைத் தவிர, 29 தனியார் கல்லூரிகளில் 1,920 இடங்கள் உள்ளன. அதில், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில், 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.
அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது. இந்நிலையில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஹெச்எம்எஸ் பட்டப் படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் விண்ணப்ப பதிவு கடந்தஜூலை 24-ம் தேதி தொடங்கியது. விண்ணப்ப அவகாசம் வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அனைத்து சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பமிட்டு அதன் நகல்களை ஆக. 14-ம் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106’ என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT