Published : 07 Aug 2025 06:35 AM
Last Updated : 07 Aug 2025 06:35 AM
சென்னை: தமிழ் மரபு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக, 10 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற ‘தமிழ்க் கனவு’ பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி தமிழ் இணையக் கல்வி கழகம் மற்றும் உயர்கல்வித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் 200 இடங்களில் 2 ஆயிரம் கல்லூரிகளைச் சேர்ந்த 2 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பரப்புரை நிகழ்ச்சி கடந்த 2023, பிப்.3-ம் தேதி தொடங்கப்பட்டது.
கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, பண்பாடு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமத்துவ வளர்ச்சி, சமூகப் பொருளாதார முன்னேற்றம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில், ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 10 கல்லூரிகளைச் சேர்ந்த 1,000மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
புத்தகக் காட்சி, ‘நான் முதல்வன்’, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, மகளிர் சுயஉதவிக் குழுவினரின் தயாரிப்புகள் உள்ளிட்ட அரங்குகளும் இதில் இடம்பெற்றிருந்தன. தமிழ், தமிழரின் தொன்மை, சமூக சமத்துவம், பொருளாதார மேம்பாடு குறித்து கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கி சிறப்பித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சு.கீதா, புதுக்கல்லூரி முதல்வர் அஸ்ரார் செஷிப், மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன், ராணிமேரி கல்லூரி முதல்வர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT