Published : 06 Aug 2025 07:55 PM
Last Updated : 06 Aug 2025 07:55 PM
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோ மெட்ரிக் புதுப்பித்தலை அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: பள்ளி மாணவர்களின் நலனுக்காக 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை அனைத்து மாணவர்களுக்கும் குறித்த நேரத்தில் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் (டிபிடி) மூலம் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு புதிதாக வங்கிக் கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டாய பயோ மெட்ரிக் விவரங்களுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை பெற வேண்டியது அவசியமாகும்.
அதன்படி 5 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இவர்களில் 5 முதல் 7 வயதுக்கு உட்பட்டவர்கள் முதல் முறை கட்டாய பயோ மெட்ரிக் விவரங்களை புதுப்பித்தல் வேண்டும். அதேபோல் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 2-வது முறை கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, பள்ளிக் கல்வித் துறையில் பயின்று வரும் 5 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 15 லட்சம் மாணவர்களுக்கு கட்டாய பயோ மெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
இந்திய தபால் துறையானது பள்ளி மாணவர்களுக்கு பயிலும் பள்ளியிலேயே முகாம் அமைத்து அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடங்கும் பணிகளை கடந்த ஆண்டு முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இத்துடன் சேர்த்து மாணவர்களுக்கு ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வது எளிதானது என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இந்திய அஞ்சல் துறையானது ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.
அஞ்சல் குறியீட்டு எண் அடிப்படையில் பள்ளிகள் பட்டியலிடப்பட்டு, அஞ்சலகப் பணியாளர்கள் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணி மேற்கொள்ள ஒப்புதல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த பணியானது ஆகஸ்ட் தொடங்கி வரும் டிசம்பர் மாதத்துக்குள் 2 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட உள்ளன. இதன் மூலம் 15 லட்சம் மாணவர்களின் ஆதார் கட்டாய பயோமெட்ரிக் விவரம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT