Published : 28 Jul 2025 07:30 AM
Last Updated : 28 Jul 2025 07:30 AM
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய சிறந்த 10 குறும்படங்களை தொகுத்து பள்ளிகளில் ஒளிபரப்பு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் 2022-23-ம் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் அவ்வப்போது திரையிடப்பட்டு வருகின்றன. இது மாணவர்களின் படைப்பாற்றல், கற்பனை மற்றும் விமர்சிக்கும் திறன் உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்த தூண்டுகோலாக அமைகிறது.
அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் (2025-26) முதல் சிறார் திரைப்படம் இந்த ஜூலை மாதம் திரையிடப்பட உள்ளது. கடந்தாண்டு மாநில அளவிலான சிறார் திரைப்பட போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் தயார் செய்த குறும்படங்களில் சிறந்த 10 படங்கள் தொகுக்கப்பட்டு திரையிடப்பட இருக்கிறது.
இந்த படங்கள் நட்பு என்றால் என்ன, நூலகம் என்ன செய்யும், ஊனம் ஒரு தடையல்ல, இயற்கையை நேசிப்போம், படித்தால்தான் உயரமுடியும், அனைவரின் உழைப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பரந்த பார்வையில் ஒரே நாளில் யோசித்து இயக்கி படத்தொகுப்பு செய்து இனிமையான இசை கோர்ப்போடு தந்த இந்த படைப்புகளாகும்.
இவை அனைத்தும் திரைத்துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள் மத்தியில் திரையிடப்பட்டு சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறார் திரைப்பட மன்றம் சார்ந்த செயல்பாடுகள் அனைத்தும் பிற மன்றச் செயல்பாடுகளைப் போல் மகிழ் முற்றம் மாணவர் குழுக்கள் மூலமாக செயல்படுத்தப்பட வேண்டும்.
இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு லிங்க் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய பாடவேளையில்உரிய வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும். இந்த பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT