Published : 26 Jul 2025 01:20 AM
Last Updated : 26 Jul 2025 01:20 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது: தரவரிசையில் நெல்லை மாணவர் முதல் இடம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் திருநெல்வேலி மாணவர் சூரியநாராயணன் முதல் இடம் பிடித்துள்ளார். கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 495 எம்பிபிஎஸ், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படும். இதுதவிர, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,659 எம்பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 6-ல் தொடங்கி 25-ம் தேதி வரை நடந்தது. 72,743 பேர் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில், தரவரிசை பட்டியலை சென்னையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பிரிவில் 39,853 பேர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் 4,062 பேர், நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் 30,428 பேர் இடம்பெற்றுள்ளனர்.

நீட் தேர்வில் 720-க்கு 665 மதிப்பெண் பெற்ற திருநெல்வேலி மாணவர் சூரியநாராயணன் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். சேலம் அபினீத் நாகராஜ் (655 மதிப்பெண்), திருப்பூர் ஹிருத்திக் விஜயராஜா (653) ஆகியோர் 2 ,3-ம் இடங்களை பிடித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கள்ளக்குறிச்சி திருமூர்த்தி (572), கிருஷ்ணகிரி சதீஷ்குமார் (563), கள்ளக்குறிச்சி மதுமிதா (551) முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

‘‘பிறப்பு, இருப்பிட சான்று போன்ற ஆவணங்களை போலியாக வழங்கிய 25 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் மட்டும் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் குறையவில்லை. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 30-ல் தொடங்கும்’’ என அமைச்சர் கூறினார்.

கூடுதல் விவரங்களை tnhealth.tn.gov.in மற்றும் tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் அறியலாம். பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலையும் அமைச்சர் வெளியிட்டார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு, துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x