Published : 24 Jul 2025 01:29 AM
Last Updated : 24 Jul 2025 01:29 AM
சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 52 அரசுப் பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான சேர்க்கை ஆணை பெற்றனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பிவிஎஸ்சி - ஏ.ஹெச். மற்றும் பி.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கூட்ட அரங்கில் கடந்த 22-ம் தேதி நேரடியாக நடைபெற்றது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 167 பேரில் 91 பேர் பங்கேற்றனர். சிறப்பு பிரிவினருக்கான 49 இடங்களில் 40 இடங்கள் நிரம்பின. மாற்றுத் திறனாளிகள் பிரிவில் யாரும் பங்கேற்காததால், அவர்களுக்கான பிவிஎஸ்சி - ஏ.ஹெச் - 6 இடங்கள், பி.டெக். - 3 இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன.
நேற்று 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெற்றது. 366 பேர் அழைக்கப்பட்ட நிலையில் 218 பேர் பங்கேற்றனர்.
இதில், பிவிஎஸ்சி - ஏ.ஹெச். படிப்பில் 45, பி.டெக். படிப்புகளில் 7 என அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 52 இடங்களும் நிரம்பின. கல்லூரிகளை தேர்வு செய்த 52 பேருக்கும் சேர்க்கை ஆணையை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
“கடந்த 2021-22 முதல் 2023-24 வரை 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் மொத்தம் 140 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி, விடுதி கட்டணமாக தமிழக அரசால் ரூ.1.65 கோடி வழங்கப்பட்ட்டுள்ளது” என்றார்.
மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம், கால்நடை துறை செயலர் என்.சுப்பையன், பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொறுப்பு) நரேந்திரபாபு, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பொதுப் பிரிவு கலந்தாய்வு: பிவிஎஸ்சி - ஏ.ஹெச். படிப்புக்கு பொதுப் பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கடந்த 21-ம் தேதி தொடங்கியது.
படிப்பு மற்றும் கல்லூரி விருப்பத்தை இன்று காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இடங்கள் ஒதுக்கீட்டுக்கான ஆணை வரும் 26-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். சிறப்பு பிரிவு மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள் பொதுப் பிரிவு கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT