Published : 24 Jul 2025 01:02 AM
Last Updated : 24 Jul 2025 01:02 AM

இடஒதுக்கீட்டு பிரிவு இடங்களுக்கு அரசு திரைப்பட கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை: அரசு திரைப்படக்கல்லூரியில் இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு தகுதியான மாணவ, மாணவிகள் ஜூலை 30 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் எம்.மேகவர்ணம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் உள்ள அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ஒளிப்பதிவு, டிஜிட்டல் இண்டர்மீடியேட், ஒலிப்பதிவு. எடிட்டிங், அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு கள் உள்ளன.

நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்வழி உள்ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் ஒருசில இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கலை ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் www.filminstitute.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 30-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

எந்தெந்த பாடப்பிரிவுகளில் எந்தெந்த இடஒதுக்கீட்டு பிரிவில் எத்தனை காலியிடங்கள் உள்ளன? என்ற விவரத்தையும், கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட இதர விவரங்களையும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் தாய் அல்லது தந்தை திரைப்படத்துறையைச் சேர்ந்தவர் என்பதற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்திடமிருந்து (SIFCC) பெற்ற சான்றிதழை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x