Published : 20 Jul 2025 12:07 AM
Last Updated : 20 Jul 2025 12:07 AM
சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. பொது பிரிவுக்கு ஆன்லைனிலும், சிறப்பு பிரிவுக்கு நேரடியாகவும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி - ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இது போக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.
பி.டெக். படிப்புகள்: திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்படும் பி.டெக். படிப்பில் உணவு தொழில்நுட்பம் பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்பம் பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில் இருந்து முறையே 6 இடங்களும், 3 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.
பிவிஎஸ்சி - ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த படிப்புகளில் 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த மே 26-ம் தேதி தொடங்கி ஜூன் 20-ம் தேதி வரை நடைபெற்றது. தரவரிசை பட்டியல் கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் 57 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று முன்னிலை பெற்றுள்ளனர். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்பில் 45 இடங்கள், பி.டெக். படிப்புகளில் 8 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இந்நிலையில், பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்புக்கு பொதுப் பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு www.adm.tanuvas.ac.in என்ற இணையதளம் வாயிலாக நாளை (ஜூலை 21) தொடங்குகிறது. 24-ம் தேதி காலை 10 மணி வரை படிப்பு மற்றும் கல்லூரி விருப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்யலாம். கல்லூரியில் இடங்கள் ஒதுக்கீடு ஆணை 26-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை மாதவரம் பால் பண்ணையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கூட்டரங்கில் 22-ம் தேதி தொடங்கி நேரடியாக நடைபெறுகிறது. முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு 23-ம் தேதி நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்குவதால், மாணவ, மாணவிகள் ஒரு மணி நேரம் முன்னதாக வரவேண்டும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT