Published : 18 Jul 2025 07:04 AM
Last Updated : 18 Jul 2025 07:04 AM
சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறை செயல்படுத்தும் முன்னோடி திட்டங்களுக்கு அமெரிக்க குழுவினர் பாராட்டு தெரிவித்தனர். அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ள புகழ்பெற்ற நிபுணர் குழுவினர், தமிழகத்துக்கு வருகை புரிந்தனர். நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்திரமோகனை இந்த குழுவினர் சந்தித்தனர்.
இந்த குழுவில் பிலடெல்பியா செவன்டி குழு தலைமை நிர்வாக அதிகாரி லாரன் கிறிஸ்டெல்லா, கிளீவ்லேண்ட், கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் பேராசிரியர் ஜூலியட் கோஸ்ட்ரிட்ஸ்கி, கொலம்பஸ் ஓகியோ பிரதிநிதிகள் சபையின் சட்ட உதவியாளர் பிரியாமெய்ஸ் இடம் பெற்றிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது தமிழக பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம், பள்ளிகளில் இருந்து குழந்தைகள் இடைநிற்றலை குறைத்தல், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, சமத்துவம் மற்றும் சமூக உணர்வுகளை உள்ளடக்கிய பாடத்திட்ட சீர்திருத்தம் ஆகியவை குறித்து செயலாளர் விளக்கினார்.
அப்போது, ஆதாரம் சார்ந்த கொள்கைகள் மற்றும் குழந்தைகளை மையப்படுத்திய உத்திகள் மூலம் பொதுக்கல்வியை மாணவர்களுக்கு வழங்கும், பள்ளிக்கல்வித் துறையின் உறுதிப்பாட்டை அமெரிக்க பிரதிநிதிகள் பாராட்டினர். மேலும், உள்ளூர் பாரம்பரியத்தை ஒருங்கிணைப்பதற்கும், சமூகத்தை மையப்படுத்திய கற்றலை ஊக்குவிப்பதற்கும், அனைத்து மட்டங்களிலும் பள்ளி மாணவர்களின் தலைமைப் பண்பை வலுப்படுத்துவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை குழுவினர் மிகவும் பாராட்டினர்.
கல்வியில் தொழில்முறை பரிமாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு, பரஸ்பர புரிதல் மற்றும் புதுமையான நடைமுறைகளை பகிர்வது ஆகியவற்றின் உணர்வை இந்த பயணம் வலுப்படுத்தியதாக அக்குழுவினர் தெரிவித்தனர். இத்தகவல் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT