Published : 18 Jul 2025 02:41 AM
Last Updated : 18 Jul 2025 02:41 AM

தமிழகம் முழுவதும் நாட்டுப்புற கலை பயிற்சிக்கான சேர்க்கை இன்று தொடக்கம்!

கோப்புப்படம்

சென்னை: நடப்பாண்டு பகுதிநேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை பணிகள் இன்று (ஜூலை 18) முதல் தொடங்குகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும், இளைய தலைமுறையினரிடம் அவற்றை கொண்டு சேர்க்கவும் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் 2024-25ம் கல்வியாண்டு முதல் தோற்றுவிக்கப்பட்டன.

அதன்படி சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக் கல்லூரிகள், சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகள், மாமல்லபுரம் அரசு கட்டிட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், சீர்காழி, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அரசு இசைப் பள்ளிகளில் மற்றும் தஞ்சை மண்டல கலை பண்பாட்டு மையம் என 25 இடங்களில் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு கரகம், தப்பாட்டம், சிலம்பாட்டம், கும்மி, துடும்பாட்டம், காவடியாட்டம், கணியான் கூத்து உள்ளிட்ட கலைகள் ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 முதல் 6 மணிவரை பயிற்றுவிக்கப்படுகின்றன.

தற்போது 2025-26-ம் கல்வியாண்டில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை ஜூலை 18-ம் தேதிமுதல் நடைபெறவுள்ளது. 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர். நாட்டுப்புறக் கலையில் ஆர்வமிக்க கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களையும், சேர்க்கைக்கான விண்ணப்பத்தை கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x